யாழ்ப்பாணக் கல்லூரி மூடப்படாமலிருக்க சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் – கல்லூரியின் ஆளுநர் சபை அறிக்கை

207 0

சுயநலன் கருதும் ஒருசிலரது நடவடிக்கைகளினால் பேர்பெற்று விளங்கும் இப் பாடசாலை பாதிக்கப்பட்டுள்ளமை மிகுந்த மனவருத்தத்தையுயும் கவலையையும் ஏற்படுத்தும் ஒன்றாகும். யாழ்ப்பாணக் கல்லூரி மூடப்படும் நிலைவராமலிருக்க சட்டரீதியான நடவடிக்கைகள் உட்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் என யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபை அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணக் கல்லூரி ஆளுநர் சபையினர் தமக்கு யாழ்ப்பாணக் கல்லூரி நிதியத்தின் தர்மகர்த்தா சபையினரால் சமீபத்தில் எழுதப்பட்ட கடிதத்தைக்குறித்து ஆழ்ந்த கரிசனையடைந்துள்ளார்கள்.

இந்த நிதியம் 140 வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணக் கல்லூரியை மட்டுமே ஆதரிப்பதற்கென அமெரிக்கா நாட்டில் பொஸ்டன் என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

தர்மகர்த்தா சபையினரால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல நிபந்தனைகளுள் ஒன்றாக யாழ்ப்பாணக் கல்லூரி ஆளுநர் சபையின் தலைவர் மற்றும் உபதலைவர் ஆகியோர் இராஜிநாமா செய்யவேண்டும் எனும் நிபந்தனையும் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இல்லையேல் யாழ்ப்பாணக் கல்லூரிக்கு நிதி வழங்கப்படுதல் நிறுத்தப்படும் எனும் அச்சுறுத்தலும் எழுந்துள்ளது.

யாழ்ப்பாணக் கல்லூரியின் யாப்பிற்கமைய தென் இந்திய திருச்சபையின் யாழ்ப்பாண அத்தியட்சாதீனத்தின் பேராயர் அதி வண. கலாநிதி டானியல் தியாகராஜா தமது பதவிவழியாக தலைவராகப் பணியாற்றுகின்றார்.

நாட்டிலுள்ள பல முன்னணி பாடசாலைகளில் அவர்களது ஆளுநர் சபையில் இவ்வகையான ஒழுங்கு உள்ளது. யாழ்ப்பாணக் கல்லூரி ஆளுநர் சபையின் உபதலைவர் செல்வி வியுலா அருளானந்தம் இலங்கையில் ஒரு சிரேஷ்ட சட்டத்தரணியும் இலங்கைத் திருச்சபையின் (அங்கிலிக்கன் திருச்சபை) உறுப்பினரும், இந்த சந்தர்ப்ப சூழ்நிலையில் யாழ்ப்பாணக் கல்லூரி ஆளுநர் சபைக்கு சட்ட ஆலோசனை வழங்கும் முக்கியமான ஒரு நபருமாவர்.

இந்த நிபந்தனை, தர்மகர்த்தாக்களான அவர்கள் சட்டம் மற்றும்; அறஞ்சார்ந்ததுமான தங்களது கடமைகளினின்று நெறிபிறழ்ந்து வந்த பல தொடர்ச்சியான செயற்பாடுகளில் சமீபத்திய ஒர் சம்பவமாகும்.

தர்மகர்த்தாக்கள் பல தடவைகள் “நம்பிக்கை சொத்தாவணத்தை”மாற்றியமைத்துள்ளனர். இப்பேர்ப்பட்ட மாற்றங்கள் அனைத்துமே யாழ்ப்பாணக் கல்லூரியுடனோ அல்லது அதனது ஆளுநர் சபையுடனோ எந்தவிதமான ஆலோசனையுமின்றி தன்னிச்சையாகச் செய்யப்பட்டவையாகும்.

மட்டுமல்ல, “ஆதரவளிக்கப்படும் நிறுவனம்” அல்லது “பிரதானமான பயனாளி”எனும் யாழ்ப்பாணக் கல்லூரியின் அந்தஸ்தை மாற்றவும் தர்மகர்த்தாக்கள் முயன்றுள்ளார்கள். 1877 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட“நம்பிக்கை சொத்தாவணம்” கூறுவதாவது“இந்த நிதியமானது யாழ்ப்பாணக் கல்லூரியை ஆதரிப்பதற்காக நிதியைபப் பெறவும் வைத்திருக்கவும் நிருவகிக்கவும் ஏற்படுத்தப்பட்டது”.

யாழ்ப்பாணக் கல்லூரி பிரதானமான பயனாளி என்னும் அந்தஸ்திலிருந்து விலத்தப்பட தருமகர்த்தா சபையினர் எடுத்த இந்த நடவடிக்கைக்காக, தர்மகர்த்தாக்கள் யாழ்ப்பாணக் கல்லூரி நிதியத்தின் பெருமளவு பணத்தை தங்களது சட்டநிபுணர்களுக்குச் செலுத்துவதற்காக மோசடி செய்துள்ளார்கள்.

யாழ்ப்பாணக் கல்லூரிக்கு வழங்கப்படும் நிதியை 20 வீதம் குறைப்பதாகவும் காரணமில்லாததும் தேவையற்றதுமான “ஆட்சியமைப்பு மாற்றங்களை” திணிக்கின்றதுமான தங்களது முடிவை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபைக்கு தர்மகர்த்தாக்கள் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிவித்தார்கள். வன்மையானதும், சட்டபூர்வமற்றதுமான இந்த நிதிக்குறைப்பு யாழ்ப்பாணக் கல்லூரிக்கு பலத்த சிரமத்தையும் கல்லூரியினது கல்விசார் நடவடிக்கைக்கு அதிக பாதிப்பையும் ஏற்படுத்தியது.

இருப்பினும் இந்த விடயங்களெல்லாவற்றையும் கல்லூரியின் நலன்கருதி சமாதானமான முறையில் தீர்த்துவைப்பதற்காக யாழ்ப்பாணக் கல்லூரியினது ஆளுநர் சபையும் கல்லூரியின் அதிபரும் முயற்சியெடுத்து தர்மகர்த்தாக்களின் பரிந்துரைகளைப் பூர்த்தி செய்தனர். இருந்தபோதிலும், தர்மகர்த்தா சபையினர் கபடத்தனமானதொரு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது அவர்களது சமீபத்தய கடிதத்தில் புலனாகிறது.

சுயநலன் கருதும் ஒருசிலரது நடவடிக்கைகளினால் பேர்பெற்று விளங்கும் இப் பாடசாலை பாதிக்கப்பட்டுள்ளமை மிகுந்த மனவருத்தத்தையுயும் கவலையையும் ஏற்படுத்தும் ஒன்றாகும். யாழ்ப்பாணக் கல்லூரி மூடப்படும் நிலைவராமலிருக்க சட்டரீதியான நடவடிக்கைகள் உட்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையினர் தொடர்ச்சியாக மேற்கொள்வர்.

Leave a comment