காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரியும், தமிழகத்தின் முன்னாள் கவர்னருமான பீஷ்ம நாராயண் சிங் வயது முதிர்வு காரணமாக காலமானார்.
பீஷ்ம நாராயன் சிங் 1933-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான 1967-ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், பீகார் மாநில அரசில் கல்வித்துறை, உணவு வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு மந்திரியாக பதவி வகித்துள்ளார். 1980-ம் ஆண்டு இந்திராகாந்தி மந்திரி சபையில் பாராளுமன்ற விவகாரங்கள் துறை, குடியிருப்பு மற்றும் தொழிலாளர் நலத்துறைக்கான மத்திய மந்திரியாக பீஷ்ம நாராயண் சிங் பதவி வகித்துள்ளார்.
1991-ம் ஆண்டு தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 3 ஆண்டுகள் தமிழகத்தின் கவர்னராக இருந்தார். பீஷ்ம நாராயணன் சிங் மறைவிற்கு தேசிய மற்றும் மாநில அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பீஷ்ம நாராயண் சிங் தமிழக கவர்னராக இருக்கும் போது தமிழ்நாட்டில் நிலவி வந்த பதற்றமான அரசியல் சூழ்நிலை காரணமாக, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

