வீடில்லாதவரை தேடி வந்த நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புகள்

8633 184

அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு பகுதியில் தங்குவதற்கு வீடு இல்லாத இணையதள வடிவமைப்பாளர் ஒருவரின் புதுமுயற்சியால் அவருக்கு தற்போது வேலை வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளன. 

அமெரிக்காவில் உள்ள வளைகுடா பகுதி சிலிகான் பள்ளத்தாக்கு. இங்கு டேவிட் கசாரேஸ் என்ற இணையதள வடிவமைப்பாளர் வேலை தேடி வந்துள்ளார். இவருக்கு இங்கு சரியான வேலை கிடைக்காததால் தங்குவதற்கு இடம் இன்றி தனது காரிலேயே தங்கி வேலைவாய்ப்பு தேடி அலைந்துள்ளார்.

எங்கும் தேடியும் வேலை கிடைக்காத டேவிட், புதுமுயற்சியாக, சாலை சிக்னல்களில் தனது பயோடேட்டாவை பொறுத்திவிட்டு, அதில் ஒரு வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளார். ‘வீடில்லாத நான் வெற்றிக்காக பசித்து இருக்கிறேன், எனது சுயவிவரங்களை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்பதே அந்த வாசகம்.

இதனைக் கண்ட ஜாஸ்மின் ஸ்கோய்ஃபீல்ட் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடைய புகைப்படத்தை பதிவிட்டு, இவருக்கு உதவ முடிந்தவர்கள் யாரேனும் இருந்தால் உதவுங்கள் என குறிப்பிட்டிருந்தார். இது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவலாக பரவியது.

டேவிட்டின் இந்த புதுவித முயற்சியால் அவருக்கு இப்போது வேலை வாய்ப்புகள் குவிந்துவருகிறது. வீடு இன்றி, வேலையின்றி தவித்த இணைய வடிவமைப்பாளர் டேவிட், தற்போது 200-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை கையில் வைத்துக்கொண்டு எந்த வேலைக்கு போகலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்துள்ளார்.

Leave a comment