அலையால் தூக்கி வீசப்பட்ட தந்தை மகனின் முன்னிலையில் மரணம்

320 0

மன்னார் வங்காலை கிராமத்தில் இருந்து இன்று அதிகாலை படகு ஒன்றில் தந்தையும் மகனும் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற நிலையில் கடலில் வீழ்ந்து தந்தை பலியான சம்பவம் வங்காலை கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உயிரிழந்தவர் வங்காலை இரத்தினபுரி கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய சிலுவைதாசன் றொனி மிராண்டா என தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மன்னார் வங்காலை இரத்தினபுரி கிராமத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் படகு ஒன்றில் இன்று திங்கட்கிழமை அதிகாலை கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்றுள்ளனர்.

கடும் காற்றும் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டிருந்த நிலையில் அவர்கள் தொழிலுக்குச் சென்றுள்ளனர்.

மன்னார் வங்காலை தென் கடல் பகுதியில் இவர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது கடலில் ஏற்பட்ட அதிவேகம் கொண்ட அலையின் காரணமாக படகில் இருந்து தந்தை கடலினுள் தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இதன் போது கடும் காற்று காரணமாக தந்தையை மீட்க முயற்சி செய்த போதும் மகனால் இயலாமல் போய்விட்டது.

உடனடியாக மகன் படகில் கடற்கரைக்கு வந்து சக மீனவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.இருப்பினும் தந்தை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் வங்காலை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment