கழுதைகளுக்கு வண்ணம் பூசி வரிக்குதிரை என ஏமாற்றிய விலங்கியல் பூங்கா

322 0

கழுதைகளுக்கு வர்ணம் பூசி வரிக்குதிரை என்று ஏமாற்றியதாக எகிப்தில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்று குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது.

உடல் மீது கருப்பு நிறக் கோடுகள் வரையப்பட்ட கழுதை ஒன்றின் படம் இணையதளத்தில் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, தாங்கள் அவ்வாறு வரையவில்லை என்று மிருகக்காட்சி சாலை நிர்வாகம் மறுத்துள்ளது.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள இன்டர்நேஷனல் கார்டன் மாநகரப் பூங்காவிற்கு சென்ற மஹ்மூத் சர்ஹான் எனும் மாணவர் ஃபேஸ்புக்கில் அந்தப் படத்தை வெளியிட்டபின் இந்த செய்தி பரவலானது. கூண்டுக்குள் இருந்த இரண்டு விலங்குகளுக்கும் உடலில் மை பூசப்பட்டு இருந்ததாக மாணவர் சர்ஹான் கூறியுள்ளார்.

சிறிய உருவம், கூரிய காதுகள் உடைய கழுதை என்று கருதப்படும் அந்த விலங்கின் முகத்திலும் கருப்பு மை பூசப்பட்டுள்ளது அந்தப் படத்தின்மூலம் தெரிய வந்துள்ளது.

படத்தில் உள்ள அந்த விலங்கு கழுதையா, வரிக்குதிரையா என்று விலங்கியல் நிபுணர்கள் சிலரும் விவாதித்து வருகின்றனர்.

படத்தில் உள்ள விலங்குக்கு இருப்பதைப் போல் அல்லாமல், வரிக்குதிரையின் முகப்பகுதி முழுதும் கருப்பாக இருக்குமென்றும், அதன் உடலில் உள்ள வரிகள் ஒரே சீராக இருக்கும் என்றும் எக்ஸ்டரா நியூஸ் எனும் உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் பேசிய விலங்குகள் மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.

அது போலியான வரிக்குதிரை அல்ல என்று அப்பூங்காவின் இயக்குநர் முகமது சுல்தான் கூறியுள்ளாஃர்.

2009இல் காசாவில் உள்ள ஒரு பூங்கா கழுதைகளுக்கு வரிக்குதிரை போல வர்ணம் பூசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்று அதிக ரோமங்களைக் கொண்ட திபெத்திய மஸ்திஃப் வகை நாய் ஒன்றை சிங்கம் என்று கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்தது. பார்வையாளர்கள் அதை சிங்கம் என்று நினைத்துப் பார்க்கப்போனபோது அது குரைத்து விட்டது.

Leave a comment