விறுவிறுவென்று வளர்ந்த அமெரிக்க பொருளாதாரம்!

420 0

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

விறுவிறுவென்று வளர்ந்த அமெரிக்க பொருளாதாரம்

கடந்த நான்கு வருடங்களில், இரண்டாம் காலாண்டில் அமெரிக்காவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்து, வருடாந்திர விகிதத்தில் 4.1 சதவீதம் விரிவடைந்துள்ளதாக அதிகாரபூர்வ கணக்குகள் கூறுகின்றன.

இதனை ‘அற்புதம்’ என்று விவரித்த அதிபர் டிரம்ப், தன் கொள்கைகள் நன்றாக இருப்பதாக கூறினார்.

ஆனால், இந்த வளர்ச்சியில் சறுக்கல் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பாகிஸ்தான்: மீண்டும் தேர்தல் நடத்த போட்டி கட்சிகள் விருப்பம்

முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் வெற்றி பெற்றதாக கூறும் பாகிஸ்தான் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என அந்நாட்டு அரசியல் கட்சிகள் சில தெரிவித்துள்ளன.

இம்ரான் கானின் கட்சி, தான் வெற்றி பெற்றிருப்பதாக அறிவித்த நிலையில், இதில் மோசடி நடந்துள்ளதாக போட்டி கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கூட்டு பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பேசிய கட்சி தலைவர் ஒருவர், மீண்டும் புதிதாக நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்

ரஷ்யா செல்ல விருப்பம் தெரிவித்துள்ள டிரம்ப்

ரஷ்யாவிற்கு வருமாறு அதிபர் விளாடிமர் புதின் அழைப்பு விடுத்துள்ளதையடுத்து, அதிபர் டிரம்ப் அங்கு செல்ல விருப்பமாக உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சூழ்நிலை சரியாக இருந்தால் அமெரிக்காவுக்கு பயணிப்பேன் என்று வெள்ளிக்கிழமையன்று அதிபர் புதின் கூறியிருந்தார். இதனையடுத்து, இரண்டாவது சந்திப்பிற்காக அதிபர் டிரம்பை அவர் ரஷ்யாவுக்கு அழைத்தார்.

கடந்த வாரம் அதிபர் டிரம்பும் புதினும் ஃபின்லாந்து தலைநகர் ஹெல்ஸின்கியில் சந்தித்து கொண்டனர்.

தப்பிச்சென்ற சட்டமன்ற உறுப்பினர்

வெனிசுவேலாவில் எதிர்க்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் மானுவேல் ஆலிவேர்ஸ், அரசு தன்னையும் தனது குடும்பித்தினரையும் அச்சுறுத்துவதாக கூறி நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

ரகசிய போலிஸ் ஏஜெண்டுகள் தான் அரசியலைவிட்டு விலகவில்லை என்றால் தன்னையும், தனது மனைவி, மற்றும் சகோதரரை துன்புறுத்தப்போவதாக தெரிவித்தனர் என வெளிப்படையான கடிதம் ஒன்றில் ஆலிவேர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

“எனது குடும்பத்தின் நலனே முதன்மையானது” என்று ஆலிவேர்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களில் பல எதிர்க்கட்சி தலைவர்கள் வெனிசுவேலாவை விட்டுச் சென்றுள்ளனர்.

அவர்கள் அதிபர் நிக்கோலஸ் மடுராவின் தலையீடு மற்றும் அதிபரின் அச்சுறுத்தலால் தங்களின் உயிருக்கு ஆபத்து நேரிடும் என அஞ்சுவதாக தெரிவித்தனர்.

Leave a comment