மகிந்த வன்னியிலிருந்து கொண்டு சென்ற சொத்தை தந்தாலே எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யலாம்- சத்தியலிங்கம்

448 0

மகிந்த ராஜபக்ச வன்னி பிரதேசத்தை கைப்பற்றிய போது இங்கிருந்து பணமாகவும், தங்கமாகவும், சொத்தாகவும் எடுத்து சென்றதை மீண்டும் தந்தாலே வடக்கில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் என தெரிவித்த ப.சத்தியலிங்கம், இதற்கு அரசாங்கத்தின் பணம் தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.

வவுனியாவில் நேற்று (புதன்கிழமை) மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்த பின்னர் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

“30 வருட யுத்தமானது மக்களின் வாழ்க்கை முறையிலே பல பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தவகையில் பொருளாதாரம், கலை, பண்பாடு போன்ற பல விடயங்கள் சீரழிக்கப்பட்டிருக்கிறது.

வடக்கு மாகாணசபை அமையும் போது அனைவரிடத்திலும் பாரிய எதிர்பார்ப்பு ஒன்று இருந்தது. எமது முதலைமைச்சர் ஒரு சட்ட மேதை பல உறுப்பினர்கள் வைத்தியர்கள், பொறியியலாளர்களாக இருந்தார்கள். எனவே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் இந்த மாகாண சபை தீர்க்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருந்தது.

ஆனால் இப்பகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் அளவுக்கு போதிய நிதி வசதிகள் எமக்கு கிடைக்கவில்லை. அண்மைய நாட்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுக்கும் படியான சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்பட்டது.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு இழப்பீடு கொடுக்கும் செயற்பாடுகள் நடைபெற இருக்கின்றன. அவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் போது, பொது எதிரணியினர் “இந்த நாட்டை அழிப்பதற்கு முயன்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, ஏழை மக்களினுடைய வரிப்பணத்தை கொடுப்பதா” என்று கேள்வி எழுப்பியதுடன் குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்திலே நிறைவேற விடமாட்டோம் என கூறுகின்றனர்.

மிகவும் மோசமான ஒரு இனவாத குழுவாக செயற்படும் அவர்கள் இந்த நாட்டிலே நிரந்தர சமாதானம் ஏற்படுவதை தடை செய்பவர்களாக இருக்கிறார்கள்.

குறித்த இழப்பீடானது போரால் பாதிக்கப்பட்ட மூவினத்தையும் சேர்ந்த மக்களுக்கே பயன்பட இருக்கிறது. அதனை சிந்திக்காமல் தமது அரசியல் பிழைப்புக்காக இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியில் வன்னிப் பிரதேசத்தை கைப்பற்றிய போது இங்கிருந்து பணமாகவும், தங்கமாகவும், சொத்தாகவும் எடுத்துச் சென்றதை திரும்ப தந்தாலே போதும். அதன் மூலமே எமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். அரசாங்க பணம் எமக்கு தேவையில்லை” என கூறினார்.

Leave a comment