மாவீரர்களின் விபர கல்வெட்டுக்கள் இராணுவ புலனாய்வு முகாமிலிருந்து மீட்பு!

1258 2

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்லறைகளில் இருந்த மாவீரர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய கல்வெட்டுக்கள் ஊரெழு இராணுவ முகாம் இயங்கிய காணியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

மாவீரர் குடும்பங்களின் விவரங்களைத் திரட்டுவதற்காக ஊரெழுவில் இயங்கிய இராணுவப் புலனாய்வாளர்கள் அவற்றை எடுத்துச் சென்று ஆராய்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

யாழ்ப்பாணத்தின் முன்னாள் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் ஆட்சிக்காலத்தில் ஊரெழு இராணுவ முகாம் புலனாய்வுப் பிரிவின் முகாமாக இயங்கியது. பலர் அங்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அது தொடர்பான அதிர்ச்சி வாக்குமூலங்களை வெளியிட்டுள்ளனர்.

வெள்ளை வான்களில் கட்டத்திச் செல்லப்பட்ட தமது பிள்ளைகளை படையினர் அந்த முகாமுக்குள்ளேயே தடுத்துவைத்துள்ளனர் என உறவினர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். எனினும் மனித உரிமைகள் ஆணைக்குழுவோ பொலிஸாரோ அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை.

இந்த நிலையில் அந்த முகாம் இயங்கிய தனியார் காணி உரியவர்களிடம் மீளக்கையளிக்கப்பட்டது.

அந்தக் காணியின் துப்புரவாக்கல் பணிகளின் போது, அங்கு புதைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் கல்வெட்டுகள் பல மீட்கப்பட்டுள்ளன.

அந்த கல்வெட்டுக்கள் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்தவையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அந்த கல்வெட்டுக்களிலிருந்த பெயர், முகவரி மற்றும் மரணமடைந்த திகதி உள்ளிட்ட விவரங்களை வைத்து மாவீரர் குடும்பங்களை இராணுவ புலனாய்வாளர்கள் ஆராந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

Leave a comment