சாதாரண வழக்கில் கைதான பெண் மீது குண்டர் சட்டம் – நீதிபதி வேதனை

315 0

“சாதாரண வழக்கில் கைதான பெண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது வருந்தத்தக்கது” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

தேனி பி.சி.பட்டியை சேர்ந்த கலாதேவி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனக்கு 48 வயது ஆகிறது. கணவர் இல்லை. ஒரு ஆண், ஒரு பெண் என 2 பிள்ளைகள் உள்ளனர். பி.சி.பட்டி பகுதியில் பரமேஸ்வரி என்பவர் இடம் வாங்கினார். அவர் வாங்கிய இடத்துக்கு எதிரில் 10 அடி நடைபாதை உள்ளது. இந்த பாதையில் 3 அடி வரை நான் ஆக்கிரமிப்பு செய்து இருந்ததாக கூறப்பட்டது. இதனால் எனக்கும், பரமேஸ்வரிக்கும் தகராறு ஏற்பட்டது. ஒருவருடன் மற்றொருவர் சண்டை போட்டபோது, அவருடைய தாயார் விலக்கிவிட்டார். அப்போது நான் தள்ளிவிட்டதில் பரமேஸ்வரியின் தாயார் காயமடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து பி.சி.பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து என்னை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், “மனுதாரர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட பின், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. ஒரு சாதாரண வழக்கில் கைதான பெண் மீது குண்டர் தடுப்பு சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது ஏற்கத்தக்கதல்ல” என்று வாதாடினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு வழிகாட்டுதல்களை கூறியுள்ளது. அவ்வாறு இருக்கும்பட்சத்தில் சாதாரண வழக்கில் கைதான பெண் மீது எப்படி குண்டர் சட்டத்தை பாய்ச்ச முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், மனுதாரர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய மாவட்ட கலெக்டர் எந்த அடிப்படையில் ஒப்புதல் அளித்தார்? அவரது செயல் வருந்தத்தக்கது” என்று நீதிபதி வேதனை தெரிவித்தார்.

விசாரணை முடிவில், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அவர் மீது குண்டர் சட்ட வழக்குப்பதிவு செய்தது குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. விசாரிக்க வேண்டும். அதுதொடர்பான அறிக்கையை வருகிற 23-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a comment