தமிழரின் சனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசு முயல்கிறது-பசுபதிப்பிள்ளை

348 0

தமிழர்கள் முன்பு பத்துப் பிள்ளைகள் வரையில் பெற்றார்கள். இப்போது ஒன்றிரண்டுடன் நிறுத்திக் கொள்கின்றார்கள். சனத் தொகையில் ஏற்கனவே நாங்கள் பின்னடைந்து செல்கின்றோம்.

ஒன்றிரண்டு குழந்தையையும் பெற்றுக் கொள்வதையும் நிறுத்தும் வகையில்தான் இந்த அரசின், அதன் பாதுகாப்புத் தரப்பினரின் செயற்பாடுகள் அமைந்துள்ளது.

இவ்வாறு வடக்கு மாகாண சபையின் கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை கேள்வி எழுப்பினார்.

வடக்கு மாகாணசபையின் நேற்றைய அமர்வில் சிறப்புக் கவனயீர்ப்பை முன்வைத்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார், குழந்தைகள் பெற்ற தாய்மாரின் விபரங்களைத் திரட்டி வருகின்றமை தொடர்பிலேயே அவரது கவனயீர்ப்பு அமைந்திருந்தது.
அவர் தனது கவனயீர்ப்பில் தெரிவித்ததாவது,

நோயாளி ஒருவரின் சம்மதமில்லாமல் அவர் தொடர்பான அறிக்கையை யாருக்கும், யாரும் வழங்க முடியாது. அவ்வாறு வழங்குவதாக இருந்தால்கூட மத்திய சுகாதார அமைச்சின் செயலரே வழங்கமுடியும். ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த மே மாதம் 25ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் குழந்தை பெற்றவர்களின் விபரங்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இது உலகில் எங்கும் நடக்காத மோசமான விடயம்.

எங்கேயோ ஒழிந்திருந்த ஒசாமா பின்லேடனைப் பிடிக்கக் கூடியளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கின்றது.

ஒரு சந்தேக நபரைக் கைது செய்வதற்கு கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள குழந்தை பெற்ற அத்தனை தாய்மாரின் விபரங்களும் அவர்களுக்குத் தேவையா? இந்த விடயத்தை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லவேண்டும் என்றார்.

Leave a comment