ரவிகரன்,சிவாஜிலிங்கம் மீதான வழக்கு ஒத்திவைப்பு

258 0

வட மாகாண சபை உறுப்பினர்களான து. ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் மீதான வழக்கு விசாரணை 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்க சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் மீது முல்லைத்தீவு பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து ரவிகரனை பெப்ரவரி 28 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்றத்திற்கு சென்ற அவர் பிணையில் விடுதலையாகியதுடன், ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக் கிழமைகளில் நீதிமன்றில் சென்று கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்தது.

இதற்கமைய கடந்த நான்கு மாதங்களாக இறுதி வெள்ளிக் கிழமைகளில் நீதிமன்றத்திற்கு சென்று கையெழுத்திட்டு வந்துள்ளார்.

இதேவேளை, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், முன் பிணைகோரி வழக்கினை ஒத்தி வைத்து பின்னர் நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக முன்னிலையாகி பிணையில் வெளிவந்துள்ளார்.

இந்நிலையில் இவர்கள் மீதான வழக்கு விசாரணை நான்கு மாதங்கள் கடந்த நிலையில் இன்று (16) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கில் இந்த விடயத்துடன் மேலும் விசாரணைகளுக்காக பொலிஸார் காலம் கோரியதற்கு அமைவாக வழக்கு விசாரணை 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave a comment