தாய்லாந்து குகையில் சிக்கிய அனைவரும் மீட்பு: மீட்புப் பணி குழுவுக்கு குவியும் பாராட்டு

324 0

தாய்லாந்து குகையில் சிக்கிக் கொண்டிருந்த அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தாய்லாந்து கடற்படை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், “கடைசியாக 12-வது சிறுவனும், கால்பந்து குழுவின் பயிற்சியாளரும் மீட்கப்பட்டனர் என்பதை தாய்லாந்து கடற்படை உறுதிப்படுத்துகிறது” என்று பதிவிட்டுள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தாய்லாந்து பிரதமர் பிராயுட் சான் ஒ சா மீட்புப் பணி குழுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.சிறுவர்களை மீட்டு ஹெலிகாப்டரில் பறந்து செல்லும் மீட்புப் பணி வீரர்களுக்கு மக்கள் தரையில் நின்றபடி தங்களை கைகளைத் தட்டிப் பாராட்டு தெரிவிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

 குகையில் சிக்கிய சிறுவர்கள் கால்பந்து அணி

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகையில் கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்கு சாகசப் பயணம் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளர் ஒருவரும் சென்றிருந்தார்.

இவர்கள் சென்ற சமயம் அங்கு திடீர் மழை பெய்து வெள்ள நீர் குகைக்குள் சூழ்ந்து கொண்டது. நீரும், சேறுமாகக் குகை சூழ்ந்ததால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்றி அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர்.

தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அங்கு தற்போது பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் உதவிக்கரம் நீட்ட, மீட்புப் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வந்தது.

வெளிநாட்டில் இருந்து வந்த நீச்சல் வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை களத்தில் இறங்கிய 4 சிறுவர்களைப் பத்திரமாக மீட்டு வந்தனர்.  இதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை மீட்புக் குழுவினர் மேலும் 4 சிறுவர்களை மீட்டனர்.

இந்த நிலையில்  இன்று மதியம் (செவ்வாய்க்கிழமை) 3 சிறுவர்கள் மீட்கப்ப்ட்டனர். குகையில் சிக்கிக் கொண்டுள்ள  மேலும் ஒரு சிறுவனையும் பயிற்சியாளரையும் இன்றைக்குள் மீட்போம் என்று மீட்புப் படையினர் கூறிய நிலையில் அவர்கள் இருவரும் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்களையும் பயிற்சியாளரையும் மீட்ட மீட்புப் பணி குழுவுக்கு உலககெங்கிலும் மக்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a comment