தமிழகத்தில் நாளை பஸ்கள் – ஆட்டோ ஓடாது – கடைகள் முழுவதும் மூடப்படும்

318 0

201609151226126734_tamil-nadu-bandh-tomorrow-omni-bus-auto-will-not-work-shops_secvpfகர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்களின் சார்பில் தமிழ் நாட்டில் நாளை  (வெள்ளிக்கிழமை) முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.

இந்த போராட்டத்துக்கு தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா., விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய தேசிய லீக் உள்பட அனைத்து எதிர்க் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய இரு கட்சிகளும் நாளை ரெயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன.

நாளைய முழு அடைப்புப் போராட்டத்தை 100 சதவீதம் வெற்றிகரமாக நடத்த விக்கிரமராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும், வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையும் உறுதிபட அறிவித்துள்ளன. இதையடுத்து நாளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் மூடப்படும் என்று வணிகர் சங்கங்களின் சார்பில் நோட்டீசுகள் ஒட்டப்பட்டுள்ளது.

எனவே நாளை தமிழ்நாடு முழுவதும் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை உள்ள சுமார் 21 லட்சம் கடைகள் மூடப்பட்டு இருக்கும். சாதாரண சிறு பெட்டிக் கடைகள் முதல் பெரிய அளவிலான சூப்பர் மார்க்கெட்டுகளும் நாளை பகலில் மூடப்பட்டிருக்கும்.

கடைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எனவே நாளைய கடை அடைப்பு 100 சதவீதம் வெற்றிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகளும் நாளை முழு அடைப்பில் கலந்து கொள்கின்றன. எனவே கோயம்பேட்டில் உள்ள 4300 காய்கறி கடைகள் மூடப்படும். அந்த கடைகளில் பணிபுரியும் சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணியை புறக்கணிப்பார்கள் என்று கோயம்பேடு மொத்த விற்பனையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த வி.ஆர்.சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களின் வரத்து கடந்த 2 நாட்களாக மிகவும் குறைவாக உள்ளது. இன்று அவற்றின் வரத்து மேலும் குறைந்தது. இந்த நிலையில் நாளை பந்த் நடப்பதால் காய்கறிகள், பூக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிலை அதிகரித்துள்ளது.

ஓட்டல்கள், பெரிய மால்கள் நாளை இயங்குமா? என்பதில் மாறுபட்ட தகவல்கள் உள்ளன. சென்னை, மதுரை, கோவை, திருச்சியில் உள்ள மால்கள் இதில் இன்னும் முடிவு எடுக்கவில்லை. அது போல தமிழ்நாட்டில் பல்வேறு ஓட்டல் சங்கங்கள் இருப்பதால் சில சங்கங்கள் “பந்த்”-ல் பங்கேற்பதாகவும், சில சங்கங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அறிவித்துள்ளன.

தமிழ்நாடு ஓட்டல்கள், சிறு டிபன் கடைகள், உணவு விடுதிகள், பேக்கரி – சுவீட் ஸ்டால்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் தஞ்சை எஸ்.எஸ்.பாண்டியன், செயலாளர் கோவில்பட்டி ராதாகிருஷ்ணன், கோவை ஏ.பி.குமாரன் ஆகியோர் கூறுகையில், “தமிழ்நாடு முழுவதும் எங்கள் அமைப்பில் உள்ள சுமார் 3 லட்சம் சிறு ஓட்டல்கள், பேக்கரிகள் மூடப்படும்” என்றார். நாளை அனைத்து எதிர்க்கட்சிகளும் முழு அடைப்பில் கலந்து கொள்வதால் பாதுகாப்பு கருதி அனைத்து சிறு ஓட்டல்களும் திறக்கப்படாது என்று தெரிகிறது.

நாளை முழு அடைப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது. நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பால் விற்பனை மையங்கள், வினியோக மையங்கள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இந்த மையங்களில் பணிபுரியும் சுமார் 1 லட்சம் பேர் பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.

எனவே தமிழகம் முழுவதும் நாளை பால் விற்பனை சுமார் 60 சதவீதம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆவின் பால் அட்டைதாரர்கள் நாளை அதிகாலை வழக்கம் போல பால் பெறலாம். ஆனால் தனியார் நிறுவன பால் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும்.

தமிழ்நாடு பெட்ரோல் வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.பி.முரளி, நாளை தமிழ்நாடு முழுவதும் சுமார் 4,600 பெட்ரோல் பங்க்குகள் முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்கின்றன. அவை நாளை பகல் முழுவதும் செயல்படாது என்று அறிவித்துள்ளார். எனவே நாளை வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாக நேரிடும்.

ஒவ்வொரு பங்க்கிலும் சராசரியாக தினமும் 1500 லிட்டர் பெட்ரோல், 4000 லிட்டர் டீசல் விற்பனை நடைபெறும். அந்த பணி முடங்கும். இதை கருத்தில் கொண்டு தனியார், அரசு வாகனங்கள் ஏற்கனவே தேவையான அளவுக்கு பெட்ரோல், டீசலை பெற்று விட்டன.

இன்று மாலை பெட்ரோல் பங்க்குகளில் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் கூட்டம் நிரம்பி வழிய வாய்ப்புள்ளது.

கர்நாடகாவில் நடந்த வன்முறை சம்பவங்களில் ஆம்னி பஸ்கள் அதிக அளவில் இழப்பை சந்தித்தன. எனவே நாளை முழு அடைப்புப் போராட்டத்தில் ஆம்னி பஸ் உரிமையாளர்களும் பங்கேற்கிறார்கள். காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை ஆம்னி பஸ்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு இடையே பகலில் சுமார் 50 ஆம்னி பஸ் சேவைகள் நடந்து வருகின்றன. அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாலை 5 மணிக்குப் பிறகு ஆம்னி பஸ் சேவைகள் வழக்கம் போல நடைபெறும்.

தமிழ்நாட்டில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நூற்றுக் கணக்கான சங்கங்கள் உள்ளன. அவற்றில் பெரும் பாலான சங்கங்கள் பந்தில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளன. கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஆட்டோக்கள் நாளை ஓடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் முழு அடைப்பில் பங்கேற்பதால் தனியார் சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களும் நாளை ஆட்டோக்களை இயக்கமாட்டார்கள் என்று தெரிகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களும் நாளை கணிசமாக ஓடாது.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 50 ஆயிரம் வேன்கள் நாளை ஓடாது. பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் வேன்கள், அலுவலகங்களுக்கு ஊழியர்களை அழைத்து செல்லும் வேன்களும் நாளை இயங்காது. எனவே வேன்களில் பயணம் செய்பவர்கள் நாளை சற்று சிரமத்தை சந்திக்க நேரிடும்.

கன்னடர்களின் வன்முறைக்கு அதிகம் இழப்பை சந்தித்திருப்பது லாரி உரிமையாளர்கள்தான். எனவே நாளை தமிழ்நாடு முழுவதும் லாரிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு லாரிகள் சுமார் 2 லட்சம், மணல் லாரிகள் சுமார் 50 ஆயிரம் ஆக மொத்தம் சுமார் 3 லட்சம் லாரிகள் நாளை ஓடாது என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.குமாரசாமி தெரிவித்தார். ஏற்கனவே லாரிகள் ஓடாததால் சுமார் 1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நாளை ஒட்டு மொத்தமாக லாரிகள் ஓடாததால் பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.

பொதுவாக முழு அடைப்பு போராட்டம் நடக்கும் போது மிகவும் அத்தியாவசிய பிரிவான பார்மசி மருந்து கடைகள் எந்தவித இடையூறும் இல்லாமல் இயங்கும். உயிர் காக்கும் பொறுப்புள்ள கடை என்பதால் மருந்து கடைகள் பணிகளில் யாரும் குறுக்கிடமாட்டார்கள்.