ஐகோர்ட்டு தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது- திருமாவளவன்

277 0

சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று திருமாவளவன் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு அடக்கு முறை ஏவப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்தைக் கூட தமிழக அரசு பறித்து வருகிறது. அரசு திட்டங்களுக்கு மாற்றுக்கருத்து கூறுகிறவர்கள் பொய் வழக்குகளில் கைது செய்யப்படுகிறார்கள். ஊடகங்கள் மீதும் வழக்கு போடப்பட்டு மிரட்டப்படுகிறது.

இந்த அடக்குமுறைப் போக்கைக் கைவிடுமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்! தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத ஒரு அவசர நிலை நடைமுறைப்படுத்தபடுகிறது.

ஜனநாயக நாட்டில் அனுமதிக்கப்பட்ட உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. விவசாயிகளை சந்தித்து கருத்துக் கேட்பவர்களைக் கூட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்து காவல்துறை கைது செய்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டில்லி பாபு, பாலபாரதி உள்ளிட்டவர்களும் விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்களும், தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல.

ஜனநாயகத்துக்கு எதிராக அரசு நடந்து கொள்ளும் போது நீதிமன்றங்களே மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையைத் தகர்ப்பதாக இருக்கிறது.

கூட்டத்திற்கு அனுமதி உண்டா? இல்லையா? என்று முடிவு செய்வதை விட்டு விட்டு சேலம்-சென்னை எட்டுவழி சாலை திட்டத்தைப் பாராட்டியும் அதற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தியும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது ஏமாற்றமும் அதிர்ச்சியும் அளிப்பதாக இருக்கிறது.

அடக்குமுறையால் மக்களின் நியாயமான உணர்வுகளை நசுக்கிவிட முடியாது. இதை மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எந்தக் காரணம்கொண்டும் மத்திய அரசின் நிர்பந்தத்துக்குத் தமிழக அரசு பணிந்து போகக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். அடக்குமுறைப் போக்கைக் கைவிட்டு ஜனநாயக வழியில் நடக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment