சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம்: பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசாதது ஏன்? ஸ்டாலின் கேள்வி

234 0

சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பேசாதது ஏன்? என எடப்பாடி பழனிசாமிக்கு, ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

மக்கள் போராட்டங்களை மத்திய-மாநில அரசுகள் ஒடுக்குவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி குற்றம் சாட்டி உள்ளது. எனவே அக்கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமை தாங்கினார். மகேந்திரன், எஸ்.எழுமலை, எம்.எஸ்.மூர்த்தி உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான மு.க.ஸ்டாலின் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நீட் தேர்வு, காவிரி பிரச்சினை, பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய முறைகேடுகள், நம்முடைய தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய வகையிலே திணிக்கப்படக்கூடிய இந்தி, திருட்டுத்தனமாக கொண்டுவரப்படக்கூடிய சமஸ்கிருதம், அதேபோல நியூட்ரினோ திட்டம், கதிராமங்கலத்தில் எரிவாயுக்குழாய் பதிக்கக்கூடிய கொடுமை, ஹைட்ரோ கார்பன் திட்டம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகிய கொடுமை, இப்போது சென்னையில் இருந்து சேலம் வரை 8 வழி சாலை அமைக்கப்போகிறோம் என்று ஒரு திட்டத்தை நிறைவேற்ற முன்வந்திருக்கிறார்கள்.
முதல்-அமைச்சராக இருக் கக்கூடிய பழனிசாமி, சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டு இதை அரசியலாக்கி அரசியல் லாபம் தேடுவதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு தவறான கருத்தை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.
பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய விவசாயிகள், பொதுமக்களிடம் சென்று இந்த செய்தியை சொன்னால் நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன் என்று தெளிவாக சட்டமன்றத்தில் எடுத்துச் சொன்னேன்.
ஆனால், இதுவரை பாதிக் கப்பட்டிருக்கக்கூடிய மக்களைப்போய் அமைச்சர்களோ, முதல்-அமைச்சரோ சந்தித்து பிரச்சினை என்னவென்று கேட்டிருக்கிறார்களா? இல்லை. தூத்துக்குடியிலும் அமைச்சர், முதல்-அமைச்சர் என யாரும் போய் பார்க்காத காரணத்தால் தான் அந்த 100-வது நாளில் மிகப்பெரிய பேரணியை நடத்தி, அதற்குப்பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர் கொல்லப்பட்ட நிலை ஏற்பட்டிருக்கிறது.
எனவே அதுபோல் நிலைமை இந்த சேலம் 8 வழி சாலை பிரச்சினைகளில் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் நாங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவரை அதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபடவில்லை.
சென்னையில் இருந்து திருவண்ணாமலை அதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம், தர்மபுரி மாவட்டம், சேலம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மக்கள் விவசாய பெருங்குடி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய இந்தச் சூழ்நிலையை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முன் வந்திருப்பது கொடுமையிலும் கொடுமையாக இருந்து கொண்டிருக்கிறது.
ஆகவே, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு, மாநில அரசு உடனடியாக இதை தன்னுடைய கவனத்தை முழுமையாக செலுத்தி முறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உண்ணாவிரத போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, தா.பாண்டியன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிகுமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து, வாழ்த்துரை வழங்கினர்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.

Leave a comment