அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற சுதந்திரதேவி சிலை மேல் ஏறிய பெண் மீது வழக்கு!

331 0

அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற சுதந்திரதேவி சிலை மேல் ஏறிய பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அமெரிக்காவில் லிபர்டி தீவில் உள்ளது, சுதந்திர தேவி சிலை. பிரசித்தி பெற்ற இந்த சிலை, 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு பிரான்ஸ் நாட்டால் வழங்கப்பட்டதாகும். தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த சிலையை காண்பதற்காக செல்வது வழக்கமான ஒன்று.

இந்த நிலையில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 3.30 மணியளவில் ஒரு பெண் அந்த சிலை பீடத்தின் மீது திடீரென ஏறத் தொடங்கினார்.

போலீசார் அந்தப் பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்கி வரச்செய்து காவலில் வைத்து விசாரித்தனர்.

இதில் அந்தப் பெண்ணின் பெயர் தெரேஸ் பேட்ரிசியா ஒகூமு (வயது 44) எனவும், அமெரிக்க எல்லையில் சட்ட விரோதமாக நுழைகிற தம்பதியரையும், அவர்களது குழந்தைகளையும் டிரம்ப் நிர்வாகம் பிரித்ததால் மன உளைச்சலில் சிக்கித் தவித்து வந்தவர் எனவும் தெரியவந்து உள்ளது.

தனது செயலுக்காக அந்தப் பெண், போலீஸ் அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டார். இருப்பினும் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் குறித்து நியூயார்க் மேயர் பில் டி பிளேசியோவின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “நியூயார்க் அழகான நகரம். இந்த நகர போலீசார், எந்த விஷயத்தையும் சரியாக கையாளுவார்கள்” என்றார். இந்த சம்பவத்தின்போது, அங்கு இருந்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் பலரும் அந்தப் பெண், சுதந்திர தேவி சிலை பீடத்தின் மீது ஏறியதை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட அது ‘வைரல்’ ஆக பரவியது.  #

Leave a comment