விக்னேஸ்வரனுக்கும்,சிவாஜிலிங்கத்துக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் – ரஞ்சன்

345 0

இராஜாங்க அமைச்சர் விஜயகலா உட்பட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என பிரதியமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மனத்தாக்கத்தில் கூறியிருந்தாலும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதியமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவெடுக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் வைத்து பொது மேடையில் கூறிய விடயம் தென்னிலங்கை அரசியற் களத்தில் பெரும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி உட்பட பல கடும்போக்குவாத சிங்கள அமைப்புக்களும் இவரது இந்தக் கருத்தை வன்மையாக கண்டித்து வருகின்றன.

இந்த நிலையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சமூக நலன்புரி பிரதியமைச்சரான ரஞ்ஜன் ராமநாயக்க, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுடன் ஊடக சந்திப்பினிடையே தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு விசாரித்தார்.

உரையாடலின் பின்னர் ரஞ்சன் ராமநாயக்க கருத்துரைக்கையில்.,

‘விஜயகலாவின் பொறுப்பற்ற கருத்து பரிமாற்றமானது அவர் சுயநினைவின்றி இருந்ததை உணர முடிகிறது. இவ்வாறான விடயத்தை பதற்றத்தில் கூறினாலும் அது பிழையான விடயமாகும். 30 வருட யுத்தத்தின் போது பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில் தற்போது சுதந்திரமடைந்துள்ளோம்.

இந்த நிலையில் மீண்டும் அவ்வாறானதொரு சூழலை ஏற்படுத்த முயற்சிப்பது தவறாகும். எனினும் அவர் இப்படியொரு விடயத்தை தெரிவிப்பது இதுவல்ல முதல் தடவை. இப்படியான கருத்துக்களை சிவாஜிலிங்கம், விக்னேஸ்வரன் போன்றோரும் கூறி வருகின்றனர்.

ஆனால் விஜயகலா போன்றோர் யாழில் ஒன்று சொல்கிறார்கள். கொழும்பில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வேறொன்றை சொல்கிறார்கள். அத்துடன், சிலர் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரை ஐயா என அழைக்கிறார்கள். ஆனால் நான் ஆயுதமேந்திய போராளிகளை ஒருபோதும் ஐயா என அழைக்கமாட்டேன். மகாத்மா காந்தி, ஆப்ரகாம் லிங்கன் போன்றோரையே நான் ஐயா என அழைப்பேன்.

இன்று எவரும் இன்னுமொரு யுத்தத்தை எதிர்பார்க்கவில்லை. இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவெடுக்க வேண்டும் என்ற இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்.

அதுமட்டுமல்லாமல் இவ்வாறான சிந்தனையிலிருக்கும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்களை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பிவைத்து புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு நல்லாட்சி அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment