எம்.எல்.ஏ.க்களை ரிசார்ட்டில் அடைக்கும் கலாச்சாரத்துக்கு தலைமை நீதிபதி எதிர்ப்பு

321 0

அரசியல் குழப்பம் ஏற்படும் நேரங்களில் எம்.எல்.ஏ.க்களை ரிசார்ட்டில் அடைக்கும் கலாச்சாரத்துக்கு தலைமை நீதிபதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல் அமைச்சராக பதவி ஏற்றார். ஆனால் சசிகலா அந்த பதவியை பிடிப்பதற்கு முயற்சித்து வந்தார்.

இந்த நிலையில் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தண்டனை வழங்கியதால் அவரால் முதல்- அமைச்சராக முடியவில்லை. இந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாக பிரிந்தார். சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் ஒன்று திரட்டி கூவத்தூர் ரிசார்ட் ஓட்டலில் தங்க வைத்தனர்.

இதற்கிடையே எடப்பாடி பழனிச்சாமி சசிகலா அணியின் முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றார். பின்னர் சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது.

அப்போது கூவத்தூர் ஓட்டலில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 

இதை எதிர்த்து ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில் எம்.எல்.ஏ.க்களை ஓட்டலில் அடைத்து வைத்து பின்னர் கொறடா உத்தரவு மூலம் பழனிச்சாமிக்கு ஓட்டளிக்க வைத்துள்ளனர். இது சட்டப்படி செல்லாது என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நடந்து வந்தது. மீண்டும் இதில் விசாரணை நடந்தது. அப்போது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நேரத்தில் இது போல எம்.எல்.ஏ.க்களை ரிசார்ட்டில் அடைப்பது பொதுவான வழக்கமாக உள்ளது. இது சரியானது அல்ல என்று கூறினார்.

மனுதாரர் ரவி தனது மனுவில் பிப்ரவரி 14-ந் தேதி சசிகலாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு 4 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கியது, 10.30 மணிக்கு தீர்ப்பு வருகிறது. 10.45 மணிக்கு 124 எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் ரிசார்ட் ஓட்டலில் அடைக்கப்படுகிறார்கள். அங்கு எடப்பாடி பழனிச்சாமியை முதல்- அமைச்சராக தேர்வு செய்ததாக அறிவிக்கிறார்கள். இது எப்படி சட்டரீதியாக சரியானதாக இருக்கும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Leave a comment