மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர் முதல் தடவையாக ஹட்டன் நகரிலிருந்து

11265 0

மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மத்திய மாகாணத்திற்கான பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டு போட்டிகள் எதிர்வரும் 9ம் திகதி முதல் 12ம் திகதி வரை கண்டியில் நடைபெறவுள்ளது.

இந்த விளையாட்டு விழாவிற்கான ஆரம்ப நிகழ்வாக ஒலிம்பிக் சுடர் பந்தம் ஏந்திய பவனி ஹட்டன் டன்பார் மைதானத்திலிருந்து இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.

ஹட்டன் வலய கல்வி பணிப்பளார் பி. ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஒலிம்பிக் சுடர் ஏந்திய பவனி ஹட்டன், கினிகத்தேனை, நாவலப்பிட்டி நகர் ஊடாக கம்பளை வழியாக கண்டி போகம்பரை விளையாட்டு மைதானத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

ஹட்டனிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒலிம்பிக் சுடர் பந்தம் ஏந்திய பவனி சென்ற குறித்த பாதை நெடுகிலும் பாடசாலை மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

இவ்விளையாட்டு விழாவில் கண்டி மாவட்டத்தின் 6 கல்வி வலயங்கள் கலந்துகொள்ளவுள்ளன. மேலும் நுவரெலியா மாவட்டத்தின் 5 கல்வி வலயங்களும் மாத்தளை மாவட்டத்தின் 4 கல்வி வலயங்களுமாக மொத்தம் 15 கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இவ்விழாவில் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டவுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாணத்திற்கான மாகாண கல்வி பணிப்பாளர் ஈ.பி.டி.கே ஏக்கநாயக்க உட்பட ஹட்டன் கல்வி வலய பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment