எதிர்க்கட்சியினர் தேவையில்லாத போராட்டங்களை உருவாக்கி அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைப்பது ஒருபோதும் நடக்காது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, 90 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்றது. இந்த திருமணங்களை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கி நடத்தி வைத்தனர்.
மணமக்களை வாழ்த்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தமிழகத்திலே ஓராண்டில் 31 ஆயிரத்துக்கும் அதிகமான போராட்டங்களை அ.தி.மு.க. அரசு எதிர்கொண்டிருக்கின்றது. அத்தனையையும் நீர்த்துப் போகச் செய்திருக்கின்றோம். அதற்குக் காரணம், இங்கே வந்திருக்கின்ற நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்புதான். ஆட்சி வலிமை மிக்கதாக இருக்கின்றது. ஒரு கட்டிடத்தினுடைய வலு, அதன் அஸ்திவாரம் போல் இருக்கும், ஒரு கட்சி வலிமையாக இருக்கவேண்டும் என்று சொன்னால், தொண்டர்கள் வலிமையாக இருக்க வேண்டும். இப்பொழுது இந்தத் தொண்டர்கள் வலிமையாக இருக்கின்ற காரணத்தினாலே, ஆட்சி வலிமையாக இருக்கிறது. அத்தனை போராட்டங்களையும் முறியடிக்கின்ற வல்லமை மிக்கது அ.தி.மு.க., அ.தி.மு.க. அரசு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாம் பல்வேறு திட்டங்களை தமிழகத்திலே கொண்டு வந்து கொண்டிருக்கின்றோம். ஒரு மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், அந்த வளர்ச்சி அடையக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு, அதை முடக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் அத்தனையையும் முறியடித்துக் கொண்டிருக்கின்றோம்.

இதனால் புதிய தொழிற்சாலைகள் வருகின்ற சூழல் ஏற்படும், அப்பொழுது இந்தப் பகுதி வளர்ச்சி பெறும். இந்த சாலை மூலமாக சென்னைக்கு செல்வதற்கு சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் குறையும், இதன்மூலம் எரிபொருள் மிச்சமாகிறது. இதன் மூலம் பொருளாதார சேமிப்பு ஏற்படும், சாலை விபத்துக்களும் குறையும். இத்தனையையும் உள்ளடக்கித்தான் அந்த நவீன சாலை அமைக்கப்படுகிறது.
இதை எதிர்க்கட்சிகள் எல்லாம் வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு பொய்யான தோற்றத்தை, ஒரு வீண்பழியை நம்முடைய அரசின் மீது சுமத்திக் கொண்டிருக்கின்றார்கள். இது மத்திய அரசினுடைய திட்டம், மாநில அரசின் திட்டமல்ல. மாநில அரசைப் பொறுத்தவரைக்கும், அதற்குத் தேவையான சாலைக்கு நிலத்தை எடுத்துக் கொடுத்து, அதற்குத் தேவையான இழப்பீட்டுத் தொகையை வழங்குவதுதான் நம்முடைய பணி. ஆனால் சாலை அமைப்பது, அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு போன்றவை எல்லாம் மத்திய அரசு வழங்குகின்றது.

தி.மு.க.வை சேர்ந்த துரைமுருகன் மதுரையிலே ஒரு கூட்டத்தில் பேசிய பேச்சு. 10 ஆயிரம் கோடி ரூபாயிலே இந்தத் திட்டத்தை கொண்டு வருகிறார்களே, அப்படியென்றால் இவருக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என்று கூறுகிறார். இந்தத் திட்டத்தை யார் நிறைவேற்றுகிறார்கள் என்பது தெரியாதது போல் பேசுகின்றார். இதன் மூலம் ஒரு உண்மை நமக்குத் தெரிகிறது, 2006-ல் இருந்து 2009-ம் ஆண்டு வரைக்கும் மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி, அப்பொழுது தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை மந்திரியாக இருந்தார்.
ஒரு சாலைக்கே இவ்வளவு கமிஷன் என்று சொல்கிறீர்களே, இந்தியா முழுவதும் மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை மந்திரியாக இருந்த டி.ஆர்.பாலுவுக்கு எவ்வளவு வந்திருக்கும், எனக்கு ஒரு சந்தேகம், டி.ஆர்.பாலுவிடம், துரைமுருகன் ஏதாவது ரோடு கான்டிராக்ட் கேட்டிருப்பார், கொடுத்திருக்க மாட்டார். இதை பயன்படுத்தி, இப்படி பேசினால், எடப்பாடி பழனிசாமி நிச்சயமாக இப்படி பேசுவார் என்று அவருக்குத் தெரியும். ஆகவே, அவருடைய உண்மைநிலை மக்களுக்குத் தெரிந்துவிட்டது. ஆகவே, மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றபொழுது, இவ்வளவு கொள்ளையடித்தார் என்பதை அவரே வெளிச்சத்திற்கு கொண்டு வந்து விட்டார்.
அந்த நேரத்தில்தான் 17 சாலைகளைக் கொண்டு வந்தார்கள். அவர்களுக்குத் தான் தெரியும் எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள் என்று. ஆகவேதான், இவ்வளவு கிடைக்கும் என்று துரைமுருகனுக்கு தெரிந்திருக்கிறது. கொள்ளை அடித்தது நீங்கள், எங்கள் மீது வீண்பழி சுமத்த வேண்டாம். மக்களுடைய பயன்பாட்டிற்காக இந்த சாலையை அமைக்கின்றோம்.
பசுமை வழிச்சாலை அமைப்பதன் மூலமாக உயிரிழப்பை தடுக்க முடியும், பயண நேரத்தை குறைக்க முடியும், எரிபொருள் செலவு குறைக்கப்படும், தேய்மானம் குறையும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சியினர், தேவையில்லாமல் போராட்டங்களை உருவாக்கி, இந்த அரசிற்கு ஒரு நெருக்கடியை உருவாக்கி, இந்த ஆட்சியை கவிழ்க்கப் பார்க்கின்றார்கள், ஒரு போதும் நடக்காது. இங்கே வருகை தந்திருக்கின்ற மக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் இருக்கின்றவரை அ.தி.மு.க.வையும் வீழ்த்த முடியாது, இந்த அரசையும் கவிழ்க்க முடியாது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

