ஓட்டுனர் உரிமம் பெற புதிய விதிகள் – மத்திய,மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

379 0

ஓட்டுனர் உரிமத்திற்கான புதிய விதிமுறையை எதிர்த்து ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘5 கி.மீ. தூரத்துக்கு 3 வேகத்தடைகள் மற்றும் 3 திருப்பங்களை கொண்ட பயிற்சி பாதையில் எரிபொருள் சிக்கனத்துடன் வாகனம் ஓட்ட பயிற்சி பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமே கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும் என புதிய விதிமுறையை உருவாக்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு இன்று (1-ந்தேதி) முதல் அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் 5 கி.மீ. தூரத்துக்கு 3 வேகத்தடைகள் மற்றும் 3 திருப்பங்களுடன் கூடிய பயிற்சி பாதைகள் இல்லை. எனவே, மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Leave a comment