காங்கிரஸ் ஆட்சியில் செய்யாத சிறப்பை அதிமுக முதலமைச்சர்கள் செய்துள்ளனர்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

286 0

காமராஜருக்கு காங்கிரஸ் ஆட்சியில்கூட செய்யாத சிறப்பை, அ.தி.மு.க. முதல்-அமைச்சர்கள் செய்துள்ளனர் என்று சட்டசபையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார். 

தமிழக சட்டசபையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, வணிகவரிகள், முத்திரைத் தாள்கள், பத்திரப்பதிவு ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது நேற்று எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அதில் பேசிய நாங்குனேரி தொகுதி எம்.எல்.ஏ. எச்.வசந்தகுமார் (காங்கிரஸ்), காந்தி மண்டபம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சிலையை பராமரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அவருக்கு பதிலளித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-

காந்தி மண்டபம், ராஜாஜி நினைவகம் மற்றும் போற்றப்படும் தியாகத் தலைவர்களின் அனைத்து நினைவு சின்னங்களும் சிறந்த முறையிலே பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த முறை இதுதொடர்பான கேள்வி வரும்போது, அன்றைக்கே முதல்-அமைச்சர் உடனடியாக பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட்டார்.

தற்போது காந்தி மண்டப வளாகம் சிறப்பான முறையிலே பராமரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு சமூக ஆர்வலர்கள்கூட, காந்தி மண்டப வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அரசு அனுமதிக்கிறது.

நாட்டிற்கு உழைத்த நல்லவர்களை, தமிழ் மொழிக்கு நற்பணியாற்றிய சான்றோர்களை, நமது நாட்டு விடுதலைக்கு தங்கள் இன்னுயிரைத் தந்த தியாகச்சீலர்களை போற்றிப் புகழ்கின்ற வகையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கடந்த 7 ஆண்டுகால ஆட்சியில், 68 மணிமண்டபங்கள், 5 நினைவுத்தூண்கள், 5 அரங்குகள், 4 நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டன.

கடந்த 7.2.2018 அன்று 30 தலைவர்களுக்கு ஒரே அரசாணையிலே பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக அறிவித்து பெருமை சேர்த்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

80 வயதை தாண்டிய காங்கிரசின் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் என்னை சந்தித்து, 45 ஆண்டுகால கோரிக்கையை எந்த அரசும் இதுவரை கண்டுகொள்ளாத நிலையில், தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியிலே ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பாரத மாதாவிற்கு ஆலயம் கட்டப்படும் என்று அறிவித்து, எனது கோரிக்கையை நிறைவேற்றிய ஒரே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்றார். அதோடு முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

1985-ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் மாவட்டம் என்று பெயர் சூட்டியது; 1977-ம் ஆண்டு மதுரை பல்கலைக்கழகத்துக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றியது; சென்னையில் உள்ள காமராஜர் வீட்டை காமராஜர் நினைவு இல்லம் என்று பெயர் சூட்டி, அதை அரசு இல்லமாக மாற்றியது போன்ற பெருமை எம்.ஜி.ஆரை சேரும்.

காமராஜர் நினைவு இல்லத்தை 2012-13-ம் ஆண்டு ரூ.25 லட்சம் ஒதுக்கி பராமரிப்புப் பணி செய்தது, விருதுநகர் மாவட்டத்தில் காமராஜர் நூற்றாண்டு மண்டபம் மற்றும் நூற்றாண்டு விழா நினைவுத்தூண் ஆகியவற்றை 2006-ம் ஆண்டு திறந்துவைத்தது, கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள காமராஜர் மணிமண்டபத்தை 2012-ம் ஆண்டு ரூ.37 லட்சம் ஒதுக்கி பராமரிப்பு பணி செய்து புதுப்பித்த பெருமையும் ஜெயலலிதாவை சேரும்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்கூட காமராஜருக்கு செய்யாத சிறப்பை எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி செய்துள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a comment