டிரம்ப்பிற்கு எதிராக அமெரிக்க செனட் சபை கட்டிடம் முன் போராட்டம் – 500க்கும் மேற்பட்டோர் கைது

278 0

சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்களை குடும்பத்தோடு கைது செய்து சிறையில் அடைக்கும் டிரம்ப் உத்தரவுக்கு எதிராக செனட் சபை கட்டிடம் முன் போராட்டம் நடத்திய 575 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அமெரிக்காவுக்குள் எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.
குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவாகியது.
இந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து மே மாதம் தொடக்கம் வரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடியேறிகள் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களுடன் வந்த சுமார் 2,300 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர். இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வந்ததை அடுத்து, குழந்தைகளை அகதிகளிடம் இருந்து பிரிக்கும் உத்தரவை டிரம்ப் ரத்து செய்தார். இருப்பினும், இன்னும் பல குழந்தைகள் பெற்றோருடன் ஒப்படைக்கப்படவில்லை. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 10 நாட்களுக்குள் குழந்தைகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சட்டவிரோத குடியேறிகளை குடும்பத்தோடு கைது செய்து தடுப்புக்காவலில் வைக்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அமெரிக்க செனட் சபை கட்டிடம் முன் கூடிய நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் டிரம்ப்பின் உத்தரவிற்கு எதிராக முழக்கமிட்டனர்.
இதையடுத்து அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுருத்தினர். ஆனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வேறு வழியின்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 575 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a comment