போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் சென்னையை சேர்ந்த 3 பேர் கைது

244 0

புதுச்சேரி மற்றும் கோவையில் போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் சென்னையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சொகுசு கார்கள் உள்பட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஏ.டி.எம். எந்திரங்களில் ஸ்கிம்மரை பொருத்தி வங்கி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டில் உள்ள தகவல்களை திருடி போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து அவர்களது வங்கிகணக் கில் இருந்து பணத்தை ஒரு கும்பல் மோசடி செய்தது. இது குறித்து ஏராளமான புகார்கள் வந்ததால் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் என்ஜினீயர் பாலாஜி, டாக்டர் விவேக் ஆனந்தன், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யா உள்ளிட்ட 11 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முத்தியால்பேட்டையை சேர்ந்த சந்துருஜியை வலைவீசி தேடிவருகின்றனர். சமீபத்தில் சமூக வலைதளத்தில், தனக்கும் இந்த மோசடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

போலீசாரின் தீவிர விசாரணையில் சந்துருஜிக்கும் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியை சேர்ந்த பீட்டர் (வயது 38) என்பவருக்கும் தொடர்பு இருப்பதும், இவர்தான் சந்துருஜியின் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது. மரைன் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்திவருகிறார்.

கோவையை சேர்ந்த பட்டதாரியான தினேஷ் (33) என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. கோவையில் அழகுநிலையம் நடத்திவரும் இவரும், பீட்டரும் சந்துருஜியிடம் இருந்து ஸ்வைப்பிங் மெஷின்களை வாங்கி சட்டவிரோதமாக ரூ.1 கோடியே 5 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

மேலும் சென்னை கொளத்தூரை சேர்ந்த இர்பான் ரகுமான் (34) என்பவருக்கும் இந்த மோசடி வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் சென்னை வடபழனியில் விமான டிக்கெட் வாங்கித்தரும் ஏஜென்சி நடத்திவருகிறார். இந்த வழக்கில் இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பீட்டரிடம் இருந்து ரூ.2 லட்சம், லேப்டாப் மற்றும் 5 ஏ.டி.எம். கார்டுகள், தினேஷிடமிருந்து சொகுசு கார் ஒன்றும், இர்பான் ரகுமானிடமிருந்து அதிநவீன சொகுசு கார் ஒன்றும், 4 லேப்டாப், 3 வங்கி காசோலை புத்தகங்கள், 2 வங்கி கணக்கு புத்தகம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடி.

கோவையிலும் இதேபோல போலி ஏ.டி.எம். கார்டு மோசடியில் ஈடுபட்ட ஒரு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், கிருஷ்ணகிரியில் ஒரு ஓட்டல் அருகில் ஏ.டி.எம். மோசடி கும்பலை சேர்ந்த 6 பேரை மடக்கிப்பிடித்தனர். கைதானவர்கள் விவரம் வருமாறு:-

நவசாந்தன் (29), உத்தண்டி, சென்னை. இலங்கை திரிகோணமலையை சேர்ந்த இவர் இலங்கை அகதியாக வந்து தங்கியிருந்தார். நிரஞ்சன் (38), கானத்தூர், சென்னை. தமிழரசன் (26), வசீம் (30), இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கிஷோர் (25), திருச்சி, மனோகரன் (19), திருப்பூர் அனுப்பர்பாளையம்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, கோவையில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி, வாடிக்கையாளர்களின் ரூ.19 லட்சத்தை சுருட்டியது தெரியவந்தது. இந்த கும்பல் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்று லட்சக்கணக்கில் சுருட்டியுள்ளனர்.

கைதானவர்களில் சென்னையை சேர்ந்த நிரஞ்சன், நவசாந்தன் ஆகியோர் தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணர்கள். போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரிப்பதில் இவர்கள் முக்கியமாக செயல்பட்டுள்ளனர். இந்த கும்பலுக்கு நவசாந்தன் மூளையாக செயல்பட்டுள்ளார். பி.எம்.டபிள்யூ. உள்பட சொகுசு கார்கள், 2 லேப்டாப், 17 செல்போன்கள், 20 போலி ஏ.டி.எம். கார்டுகள், 40 கிராம் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 6 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a comment