தம்பி பிரபாகரன் போல செயற்பட வேண்டும்-வடக்கு முதல்வர்(காணொளி)

2101 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமக்கு எதிரான இயக்கங்களை ஒன்றிணைத்து ஒரு கட்சியாக்கியதாகவும், தற்போது அக்கட்சிகளில் ஒரு சில கட்சிகள் பிரிந்து சென்றுள்ள நிலையில், அவற்றையெல்லாம் ஒன்றுசேர்த்து ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டியது காலத்தின் அவசியத் தேவையாகும் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ‘நீதியரசர் பேசுகிறார்” நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண முதல்வரின் நீதியரசர் பேசுகிறார் நூல் யாழ்ப்பாணத்தில் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் நீதியரசர் பேசுகிறார் எனும் நூலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் வெளியிட்டு வைத்தார்.

முதலமைச்சரின் இரண்டு வருட உரைகளைத் தொகுத்து வெளியிடப்பட்ட இந் நூல் வெளியீட்டு நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது நூலை முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடமிருந்து பெற்றுக் கொண்டு இரா சம்பந்தன் வெளியிட்டு வைக்க முதலமைச்சரின் சகோதரி முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

இதன்போது விருந்தினர்களாகக் கலந்த கொண்டிருந்த சம்பந்தன் உள்ளிட்டவர்களுக்கு முதலமைச்சர் பொன்னாடைகளைப்போர்தி மாலைகளை அணிவித்துக் கௌரவித்ததுடன் நினைவுப் பொருட்களையும் வழங்கி வைத்தார்.

தமிழர் அரசியலில் ஒரே கட்சியில் இருந்தாலும் எதிரும் புதிருமாய் கருதப்படுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா ஆகியோர் நீண்ட காலத்திற்குப் பின்னர் நேற்று ஒரே மேடையில் தோன்றியிருந்தனர்.

இந் நிகழ்வில் கலந்து கொள்வதே முன்னர் சந்தேகமாக இருந்த கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நூலையும் வெளியிட்டு வைத்தார்.

இதற்கு மேலதிகமாக கடந்த சில வருடங்களாக முதலமைச்சருடன் பகிரங்கமாகவே ஊடகங்களுடாக முரண்பட்டு வருகின்ற கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் முதலமைச்சரின் மாணவனான எம்.ஏ.சுமந்திரனும் இந்த நிகழ்வின் ஆரம்பித்திலேயே வந்து நிகழ்வு முடிவடையும் வரையில் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

அதே போன்று வட மாகாண முதலமைச்சர் நியமித்ததில் தான் தவறு இழைத்துள்ளதாகவும் இனிமேல் அந்தத் தவறை இழைக்க மாட்டேன் என்றும் அடுத்த மாகாண முதலமைச்சராகப் போட்டியிட விருப்பமும் தெரிவித்திருக்கின்ற மாவை சேனாதிராசாவும் முதல்வரின் நிகழ்வு ஆரம்பம் முதல் முடிவடையும் வரையில் கலந்து கொண்டிருந்தார்.

இவ்வாறு அண்மைக்காலமாக முதல்வருடன் பகிரங்கமாகவும் ஊடகங்களுடாகவும் முரண்பட்டு எதிரும் புதிருமாய் செயற்பட்டு வருகின்ற கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல்வரின் நூல் வெளியீட்டில் ஒருமித்து கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சரவணபவன் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அவ்வாறே ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அவரது கட்சியின் மாகாண சபை

உறுப்பினர் தவநாதன் ஆகியோரும் அவருடைய கட்சியில் இருந்து விலகியிருக்கின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மற்றும் மாகாண எதிர்க் கட்சித் தலைவரான சின்னத்துரை தவராசா ஆகயோரும் கலந்து கொண்டிருந்தனர்.

அதே போன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கNஐந்திரன் உட்பட கட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணண் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருக்கின்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சிரேஸ்ட உறுப்பினரும் வடக்கு மாகாண கல்வி அமைச்சருமான சர்வேஸ்வரனும் கலந்து கொண்டிருந்தார்.

இதேவேளை அரச கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா தந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்களாகவும் அமைச்சர்களாகவும் இருக்கின்ற அங்கஐன் இராமநாதன் மற்றும் விஐயகலா மகேஸ்வரன் ஆகியோர் மாத்திரம் இந் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. எனினும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாகாண சபை உறுப்பினராக இருக்கின்ற சிவக்கொழுந்து அகிலதாஸ் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்கு கூட்டணியின் முக்கியஸ்தரும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருமான எஸ்.பாஸ்கரா கலந்து கொண்டிருந்தார். இவ்வாறு தமிழர் அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் முரண்டுபட்டுக் கொண்டிருக்கின்ற அனைத்தக் கட்சிகளினதும் உறுப்பினர்கள் முதல்வரின் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந் நிகழ்விற்கான ஆசன ஒதுக்கீடுகள் முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் நிகழ்வில் பலரும் வருகை தந்ததால் ஆசன ஒதுக்கீடுகளிலம் மாற்றம் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

https://youtu.be/1-B6I11OIL8

Leave a comment