ஆளுநர் மாளிகை முற்றுகை – ஸ்டாலின் உள்ளிட்ட திமுக.வினர் ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு

236 0

சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அக்கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார்.  நாமக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், பரமத்தி சாலை வழியாக அண்ணாநகருக்கு காரில் சென்றார். அப்போது கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல் அண்ணா சிலை அருகே கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது.
அதில் ஆளுநர் சென்ற கார் மீது கருப்புக்கொடி, பலூன்களை வீசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தி.மு.க.வை சேர்ந்தவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், ஜெ. அன்பழகன் உள்ளிட்டோர் கருப்பு கொடி ஏந்தி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி நேற்று பேரணியாக சென்றனர்.
அவர்கள் ஆளுநர் மாளிகை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து கூட்டத்தினரிடையே பேசிய ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் செய்யவேண்டிய பணிகளை ஆளுநர் செய்வது கண்டிக்கத்தக்கது . மத்திய அரசின் ஏஜெண்டு போல தமிழக ஆளுநர் செயல்படுகிறார்.  தூய்மை என்ற பெயரில் அவர்களே குப்பைகளை வீசிவிட்டு அள்ளிச்செல்கின்றனர்!.
தி.மு.க. மாநில சுயாட்சி கொள்கையை வலியுறுத்தும் என்றும் இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சி போராட்டத்தை எப்போதும் கைவிடாது என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில், மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் 1,111 பேர் மீது அனுமதியின்றி சட்டவிரோத முறையில் கூடுதல், அதிகாரிகளின் உத்தரவை அவமதித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a comment