லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்- மத்திய மந்திரியுடன் 27-ந் தேதி பேச்சுவார்த்தை

227 0

கடந்த 4 நாட்களாக நடந்து வந்த லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து வருகிற 27-ந் தேதி லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன், மத்திய மந்திரி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

டீசல் விலை தினசரி உயர்வு, 3-ம் நபர் காப்பீட்டு தொகை கட்டணம் 30 சதவீதம் அதிகரிப்பு, சுங்க கட்டணம் ஆண்டுதோறும் உயர்வு போன்றவற்றை மத்திய அரசு ‘வாபஸ்’ பெறக்கோரி கடந்த 18-ந் தேதி, அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியது.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் உள்பட 40 சங்கங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர். போராட்டம் காரணமாக ஏராளமான லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது. சென்னையில் கோயம்பேடு, மாதவரம், வானகரம், நெற்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.

4-வது நாளாக நேற்றும் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. இந்தநிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்தது. அதன்படி நேற்று டெல்லியில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் மற்றும் துறை அதிகாரிகள், சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சங்க நிர்வாகிகளின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்றும், இதுதொடர்பாக வருகிற 27-ந் தேதி மத்திய மந்திரி நிதின் கட்காரி பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.சுகுமார் கூறியதாவது:-

நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் நடத்திய போராட்டத்தில் மத்திய அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் எங்கள் சங்க நிர்வாகிகளுடன், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டது. எங்கள் சங்க நிர்வாகிகளுடன் டெல்லியில் வருகிற 27-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி உறுதி அளித்திருக்கிறார்.

இதனை அரசு செயலாளர் எங்களிடம் தெரிவித்தார். எனவே அன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் எங்கள் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனைத்தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது. பேச்சுவார்த்தை முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment