கோத்தாபய ராஜபக்சவின் முயற்சிக்கு உயிர் கொடுக்கப்படுவது மிகவும் ஆபத்தானது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
வட மாகாணம் தழுவிய காணிப் பிரச்சினைகள், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் குறித்து த.தே.கூட்டமைப்பின் உயர்மட்ட குழு நேற்று கொழும்பில் கூடி ஆராய்ந்திருந்தது.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
இரணைமடு குளத்திற்கு தெற்குப் பக்கமாக சீன அரசாங்கத்தினால் இராணுவத்திற்கு வழங்கப்பட்ட, பொருத்து வீடுகள் பெருமளவில் அமைக்கப்பட்டு அப்பகுதியில் சுமார் 4 ஆயிரம் இராணுவ குடும்பங்களை குடியேற்றுவதற்கு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச முயற்சித்திருந்தார்.
எனினும் ஆட்சி மாற்றத்தினால் மேற்படி விடயம் சில காலம் கைவிடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அந்த குடியேற்றத்தை செய்வதற்கான முயற்சிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாக த.தே.கூட்டமைப்பின் உயர்மட்ட குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த குடியேற்றம் தொடர்பாக வரைபடங்கள், ஆதாரங்களுடன் ஆவணம் ஒன்றை தயாரிக்கும்படி கேட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்படி விடயம் மிக ஆபத்தானது என்பதுடன், போருக்கு பின்னர் தமிழ் மக்களின் அடிப்படை கட்டுமாணங்களை அழிக்கும் இன அழிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவே இந்த விடயம் தொடர்பாக மேலதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என தான் உயர்மட்ட குழுக்கூட்டத்தில் வைத்து கூறியதாக சிறீதரன் கூறியுள்ளார்

