மொழி,பண்பாட்டை பேணவேண்டுமானால் எமது இருப்பை தக்கவைக்கவேண்டும்-வியாழேந்திரன்

274 0

மத்திய அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகின்ற பல்வேறுபட்ட திணைக்களங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற காணிகளை தன்னிச்சையாக தங்களுக்குள் உள்வாங்குகின்ற நிலைமை இருந்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

தேசிய ரீதியில் இளைஞர்களின் மேம்பாட்டுக்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் விவகார அமைச்சு ஆகியன இணைந்து நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துவரும் இலத்திரனியல் நூலகத்தினை உருவாக்கும் செயற்றிட்டம் மட்டக்களப்பில் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய பாரிய பிரச்சினையாக இருப்பது நில ஆக்கிரமிப்பாகும். நில ஆக்கிரமிப்புக்கு எதிராக களத்திலே நின்று போராடுவதில் எங்களுடைய காலமும் நேரமும் கூடுதலாக கழிந்து செல்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டம் வளமானதொரு மாவட்டமாகும். 2640 சதுர கிலோமீற்றரை கொண்ட மிகப்பெரிய மாவட்டமாகும். 345 கிராம சேவகர் பிரிவுகளையும் 1085 கிராமங்களையும் கொண்ட மாவட்டமாகும்.

எங்களுடைய மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற பகுதிகளை அண்டியிருக்கின்ற நிலங்களை அபகரிக்கின்ற அல்லது சூறையாட நினைக்கின்ற நிகழ்ச்சி நிரல் 2009ஆம் ஆண்டில் எங்களுடைய போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு வெருகல் தொடக்கம் துறைநீலாவணை வரை நடந்துகொண்டிருப்பதை நாங்கள் அறிவோம்.

மட்டக்களப்பு படுவான்கரை பகுதிகளில் 92 தமிழ்ப் பாடசாலைகள் மூடப்படுகின்ற அபாய நிலையில் இருக்கின்றன. ஒரு கிராமத்திலே பாடசாலை மூடப்படும்பொழுது அக்கிராமத்தில் இருக்கின்ற மக்கள் அக்கிராமத்தை விட்டு இடம்பெயரவேண்டிய சூழ்நிலை ஏற்படும். மக்கள் அங்கிருந்து இடம்பெயரும்பொழுது அந்த நிலங்கள் பறிபோகின்ற நிலைமை ஏற்படும்.

பல்லாயிரக்கணக்கான போராளிகளும், இலட்சக்கணக்கான பொதுமக்களும் இந்த மண்ணிலே வித்துடலாக்கப்பட்டது சாதாரணமானதொரு தேவைக்காகவோ, கிறவல் வீதிகளுக்காகவோ, அன்றாட தேவைகளுக்காகவோ அல்ல. இந்த நிலத்தை பாதுகாப்பதற்காகவே போராட்டங்கள் நடந்தன. இன்று நாங்கள் அதனை மறந்துவிடக்கூடாது.

எங்களுடைய மொழி, கலை, கலாசாரம், பண்பாடு, விழுமியங்கள் பேணப்பட வேண்டுமானால் முதலில் எங்களுடைய இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும். இருப்பை இழந்தபின்பு நாங்கள் எதை வைத்தும் ஒன்றும் செய்துவிட முடியாது.

முதலில் இளைஞர்கள் இந்த விடயத்தில் விழிப்புணர்வு பெறவேண்டும். இளைஞர்கள் சமூகப்பொறுப்புணர்வு உள்ளவர்களாக மாறவேண்டும். பலர் சமூகப் பொறுப்புணர்வோடு இருக்கின்றீர்கள். செயற்படுகின்றீர்கள். எங்கள் சமூகம் சார்ந்து சிந்திக்கின்ற அந்தப் பொறுப்புணர்வை நாங்கள் கூடுதலாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கரவெட்டியாறு பகுதிக்கு அருகிலுள்ள சிப்பிமடு பகுதியில் 12 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை விமானப்படைக்கு கொடுத்திருக்கின்றார்கள். அந்தக் காணிகளில் அவர்கள் படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தற்காலிக கூடாரங்களை அமைத்திருக்கின்றார்கள்.நான் பிரதேச செயலாளரிடம் இது பற்றி வினவியபோது அவர் தனக்கு இவ்விடயம் தெரியாது எனவும் அறிவிக்கப்படவில்லை என கூறினார்.

பிரதேச செயலாளருக்குத் தெரியாமல் மாவட்ட அரசாங்க அதிபருக்குத் தெரியாமல் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்திற்கோ, மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்திற்கோ தெரியாமல் மாவட்ட வன இலாகா அதிகாரிகள் அந்தக் காணிகளை கொடுக்கின்ற நிலைமை இருக்கின்றது.

இவ்விடயத்தில் எங்களுடைய சமூகத்தையும் சமூகத்தின் அடுத்த தலைமுறையையும் எங்களுடைய நிலத்தையும் மொழியையும் கலை, பண்பாட்டு அம்சங்களையும் பாதுகாப்பதில் இளைஞர்கள் முன்வரவேண்டும். இளைஞர்கள் முன்வரும்போதுதான் இளைஞர் சக்தியை மகத்தான சக்தியாக ஒன்றுதிரட்டி எங்களுடைய இருப்பை தக்கவைப்பதற்கான வழிவகைகளை நாங்கள் மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment