ஜெ., நினைவிடத்திற்கு, 500 துாண்கள் அமைக்கும் பணிகளை, வட கிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை, மெரினா கடற்கரையில், மறைந்த ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் அமைக்க, 50.80 கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, மே, 7ல் நடந்தது. கட்டுமான பணிகள், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இங்கு, ஜெ., உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பீனிக்ஸ் பறவை வடிவில், சமாதி அமைக்கப்பட உள்ளது.
அவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் கண்காட்சி மண்டபம், அறிவுசார் பூங்கா, மகளிர் ஆலோசனை கூடம் உள்ளிட்ட கட்டடங்களும், கட்டப்பட உள்ளன. இதற்காக, மொத்தம், 500 துாண்களை அமைக்க வேண்டி உள்ளது. ஜெ., நினைவு நாளான, டிசம்பர், 5ல், நினைவிடத்தை திறக்க, அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக, கட்டுமான பணிகளை விரைவுப்படுத்த, பொதுப்பணி துறையினர் ஏற்பாடு செய்து உள்ளனர்.
அக்டோபர் மாதம், வட கிழக்கு பருவமழை துவங்கினால், கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்படும். எனவே, செப்., மாதத்திற்குள் துாண்களை அமைத்து விட்டால், மற்ற பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். இதற்காக, ஓரிரு நாட்களில், துாண்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் துவங்கவுள்ளதாக, பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

