அம்மாவுடன் வாழ கிடைக்கவில்லை அப்பாவுடனாவது வாழ வேண்டும் !

438 0

கிளிநொச்சிக்கு வருகை தரும் போது எனது அப்பாவையும் கூட்டிக்கொண்டு வாருங்கள் மாமா என ஆயுள் தண்டனை அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையிலேயே அவர்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

கடந்த 2007 ஆம் ஆண்டு கொழும்பு – பிலியந்தலையில் உள்ள இலங்கை இராணுவத்தின் முக்கிய இலக்கொன்று புலனாய்வு போராளிகளின் சரியான தகவல்களுடன், கரும்புலிகளின் தாக்குதல் படையணியின் உதவியுடன் இரவு 9.20 முதல் 10.20 வரையிலான நேரத்தில் தாக்கப்பட்டதாகவும், இந்த தாக்குதலுக்கு உதவியாக இருந்தார், திட்டங்களை வகுத்தார், வெடிபொருட்களை நகர்த்தினார் என்றும், விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் 10 வருடத்திற்கும் அதிக காலம் அங்கம் வகித்தார் என்றும், இன்னும் பல பயங்கரவாத குற்றச் செயல்களிலும் தொடர்புபட்டுள்ளார் என தெரிவித்து காவல் துறையினர் ஆனந்த சுதாகரனை தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட தருணத்தில் ஆனந்த சுதாகரனுக்கு 27 வயதெனவும் , இரண்டு பிள்ளைகளுக்கு தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஆனந்த சுதாகரன் 4 ஆம் மாடியில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டார்.

அத்துடன் அவர் நீண்ட விசாரணைகளின் பின்னர் குற்ற ஒப்புதல் பத்திரத்திலும் கையொப்பம் இட்டார். இதனை தொடர்ந்து ஆனந்த சுதாகரனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு அவருக்காக நீதிமன்றத்தில் வாதாடிய சட்டத்தரணிகளால் அவரை விடுதலை செய்ய முடியாத நிலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 8 ஆம் இலக்க அறையில், வழக்கு இலக்கம் HC 6656-13 மீது நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளிக்கிறார்.

சுதாகரன் உட்பட மேலும் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி அன்றைய தினம் ஓய்வு பெற்றுச் சென்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி ஆனந்தசுதாகர் யோகராணி கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.

கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்ற அவரின் இறுதி நிகழ்வுக்கு காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஆனந்தசுதாகர் அழைத்து செல்லப்பட்டு மூன்று மணித்தியாலயங்கள் மனைவியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியாக ஆனந்த சுதாகரனுக்கு மகனும் மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர். மகன் தாயின் உடலுடன் மாயானம் நோக்கிய இறுதி ஊர்வலத்தில் சென்றுவிட மகள் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் அனைவரது மனங்களையும் நெகிழவைத்தது.

ஆனந்த சுதாரனின் பிள்ளைகள் இருவரும் நிர்கதியான நிலையில் பெற்றோருடனின்றி வசித்து வருகின்றனர். இந்நிலையிலேயே அவர்கள் ஜனாதிபதிக்கு இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

“நாங்களும் இந்த நாட்டின் சிறுவர்களே தங்களின் நிலையை கருத்தில் கொண்டு அரச தலைவர் மாமா எங்கள் அப்பாவை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கோருகின்றோம். அம்மாவை இழந்தும் அப்பாவை பிரிந்தும் நானும் தங்கச்சியும் வாழ்ந்து வருகின்றோம். அம்மாவுடன் வாழ்வதற்கு கொடுத்து வைக்கவில்லை அப்பாவுடன் வாழ்வதற்காவது மாமா உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்”.

Leave a comment