வட கொரியாவுடன் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார் டிரம்ப்

296 0

சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வடகொரிய தலைவருடன் முக்கிய ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட உள்ளார். 

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு இன்று சிங்கப்பூரில் நடைபெற்றது.  சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள  கேபெல்லா ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்ததாக இருவரும் தெரிவித்தனர்.

அதன்பின்னர், கிம் ஜாங் அன் – டொனால்டு டிரம்ப் இடையே 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, இரு தலைவர்களின் முக்கிய உதவியாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே உடன் இருந்தனர். மதிய உணவு அருந்திய பின்னர் இருவரும் தனியாக நடந்து சென்று பேசினர். அப்போது, முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து நேரடியாக இருவரும் விவாதித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து டிரம்ப் கூறும்போது, ‘இது மிகவும் அற்புதமான கூட்டம், நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எதிர்பார்த்ததைவிட இந்த பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்தது. இருவரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளோம்’ என்றார். ஆனால் அது எந்த துறை சார்ந்தது என்ற விவரத்தை வெளியிடவில்லை.

Leave a comment