அதிமுக சட்டவிதியில் குழப்பம்? – திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட வாய்ப்பு

203 0

அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவி இல்லை என சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குழப்பம் இருப்பதால் அதனை திருத்தம் செய்து சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிளவு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர்.

அதன்பிறகு கட்சி நலன் கருதி அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டது. இரு அணிகளும் ஒன்றாக இணைந்தது. அந்த அணிக்கே அ.தி.மு.க. கட்சி பெயரும், இரட்டை இலை சின்னமும் திரும்ப கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதி கூட்டப்பட்டு அதில் அ.தி.மு.க. சட்ட விதிகள் மாற்றப்பட்டன. பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு, அதற்குப் பதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உருவாக்கப்பட்டன.

அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவியும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த இந்திய தேர்தல் ஆணையம் அதற்கு ஒப்புதல் அளித்து இனி ஈ.பி.எஸ் ஓ.பி.எஸ் அணி தான் அதிமுக என அங்கீகாரம் அளித்திருந்தது.

இந்நிலையில், அதிமுக சார்பில் அளிக்கப்பட்டிருந்த அறிக்கையில் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி 1976-ம் ஆண்டு முதல் இல்லை என்பது போல் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி 1976-ம் ஆண்டு முதல் பொதுச்செயலாளர் பதவி இல்லை என்றால் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் அக்கட்சியில் வகித்த பதவி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த குழப்பத்தை சரி செய்யும் வகையில், அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட அக்கட்சியின் சட்டவிதிகள் குறித்த அறிக்கையில், விதி 46-ஐ திருத்தம் செய்து சமர்ப்பிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a comment