சட்டசபையில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு – துப்பாக்கி சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு வலியுறுத்தல்

299 0

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதால் தமிழக சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோருவது தொடர்பாக சட்டசபையில் இன்று பேசுவதற்கு தி.மு.க. அனுமதி கேட்டது. ஆனால் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சபை நிகழ்வுகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்ட சதி. அதிகாரிகளை ஆள்மாறாட்டம் செய்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு அமைத்துள்ள விசாரணைக் கமிஷன் என்பது கண்துடைப்பு வேலை. அந்த கமிஷன் மீது நம்பிக்கை இல்லை. விசாரணைக் கமிஷனால எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. எனவே, சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று நேரமில்லா நேரத்தில் பேசுவதற்கு அனுமதி கேட்டோம்.

அவை தொடங்குவதற்கு முன்பே இது தொடர்பாக பேரவைத் தலைவரிடம் இதனை தெரிவித்தோம். ஆனால் முதல்வர் ஒப்புதல் அளிக்காததால் இதுபற்றி பேச வேண்டாம் என பேரவைத் தலைவர் கூறினார். துப்பாக்கி சூடு குறித்து பேரவையில் பேசக்கூடாது என்றால் நாங்கள் ஏன் அவைக்கு வரவேண்டும்? எனவே, வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment