மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ஜார்ஜ் புஷ்

11265 23

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் உடல்நிலை தேறியதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபுள்யு புஷ் மைனே மாநிலத்தில் வசித்து வருகிறார். 93 வயதான ஜார்ஜ் புஷ்சுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்பட்டதையடுத்து மிகவும் சோர்வடைந்தார். இதையடுத்து கடந்த மாத இறுதியில் தெற்கு மைனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உறவினர்கள் உடன் இருந்து அவரை கவனித்து வந்தனர். ஜார்ஜ் புஷ் குணமடைய வேண்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை பதிவு செய்தனர்.

சுமார் ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் குணமடையவேண்டி பிரார்த்தனை செய்த அனைவருக்கும் ஜார்ஜ் புஷ் நன்றி தெரிவித்திருப்பதாக அவரது குடும்ப செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இதேபோல் கடந்த ஏப்ரல் மாதமும் ஜார்ஜ் புஷ்சுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரத்தத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டதையடுத்து இரண்டு வார காலம் டெக்சாஸ் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment