சட்டசபையில் பங்கேற்பது பற்றி இன்று முடிவு செய்யப்படும் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

257 0

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா ‘கலைஞர் 95’ என்ற தலைப்பில் திருவாரூரில் உள்ள அண்ணா திடலில் நேற்று நடந்தது. இதற்கு, தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் விழா பேருரை நிகழ்த்தினார். முதன்மை செயலாளர் துரைமுருகன் வரவேற்புரையாற்றினார்.

கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவு வந்து இருந்தாலும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறந்து விடவில்லை என்றால் உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை வரும் என்பதை நான் அழுத்தம், திருத்தமாக கூறிக்கொள்கிறேன்.

7 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் ஓராண்டாவது ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறதா? இல்லையே. அண்ணா மறைந்த பின்னர் இந்த கட்சியையும், ஆட்சியையும் கட்டிக்காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் கருணாநிதி.

அந்த நேரத்தில் அண்ணாவின் இதயத்தை இரவலாக கவிதைபாடி கேட்டார். நான் கவிதை பாடி கேட்கவில்லை. கருணாநிதியிடம் கடன் கேட்கிறேன். என்ன கடன் என்றால், கருணாநிதி அவர்களே. உங்கள் சக்தியின் பாதியை எங்களுக்கு கொடுங்கள்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்து கொண்டிருக்கக்கூடிய நாசகார ஆட்சியை, கொலைகார ஆட்சியை, ஊழல் மலிந்து இருக்கிற ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கான போருக்கு நாங்கள் தயாராகிக்கொண்டு இருக்கிறோம்.அந்த போரில் வெற்றி பெற உங்கள் சக்தியில் பாதியை எங்களுக்கு தாருங்கள். இந்த பாசிச அரசுகளை வீழ்த்தி, வெற்றியை இந்த மண்ணில் கொண்டாடுவோம். அதிலும் நீங்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளர்கள் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

சட்டசபை கூட்டத்தை பற்றி இங்கு பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். சட்டசபை கூட்டத்தொடரில் நாங்கள் பங்கேற்க வேண்டும் என்று கூறினார்கள். அதற்கான விளக்கத்தை துரைமுருகன் எடுத்துக்கூறினார்.

நாளையதினம் (இன்று) சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அறிவாலயத்தில் கூட்டுகிறோம். இதற்கிடையில் நெல்லையில் 5-ந் தேதி, திருச்சியில் 8-ந் தேதி, சேலத்தில் 13-ந் தேதி மாதிரி சட்டசபையை கூட்ட முடிவுசெய்துள்ளோம். இதற்கான அறிவிப்பு வெளியிட்டு உள்ளோம். இந்த நிலையில் தி.க. தலைவர் வீரமணி கூறியதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.ஜனநாயகத்தில் சட்டமன்றத்தை முறையாக பயன்படுத்த வேண்டும் என்பதில் எள்ளளவு யாருக்கும் சந்தேகம் கிடையாது. அதை நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

சட்டசபைக்கு நாங்கள் போகத்தயார். எதைப்பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. நேரடியாக சந்திக்க என்றைக்கும் தயார். அதே நேரத்தில் ஜனநாயக மாண்பு காக்கப்படுகிறதா?

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏற்கனவே எங்களை வெளியேற்றி இருக்கிறார்கள். ஒரு கூட்டத்தொடரில் 2 முறை வெளியேற்றி விட்டால் கூட்டத்தொடருக்கு வர முடியாது. 2 முறை வெளியேற்றிவிட்டால் 3-வது முறை உள்ளே வர முடியாது. ஆகவே பிரச்சினையை கிளப்பி எங்களை நீக்கிவிட்டால் அடுத்து சட்டசபைக்கு செல்ல முடியாது.

18 எம்..எல்.ஏ.க்கள் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதில் தீர்ப்பு இன்றோ, நாளையோ வர உள்ளது. அப்படி வரும் சூழ்நிலையில் சட்டசபையில் நம்பிக்கை தீர்மானத்தை ஆட்சியாளர்கள் நிறைவேற்ற வேண்டும். அப்போது நாங்கள் உள்ளே செல்ல முடியாது. அதற்காகத்தான் அவர்கள் இப்படி நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.

இருப்பினும் நீங்கள் தெரிவித்து இருக்கிறீர்கள். அனைத்துகட்சி தலைவர்கள் எடுத்து வைத்துள்ளர்கள். நான் கருணாநிதியின் மகன். அந்த உணர்வோடு நீங்கள் எடுத்து வைத்துள்ள கருத்துக்களை எல்லாம், நாளை (இன்று) நடைபெறும் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து பேசி அதற்கு அடுத்தபடியாக நீங்கள் திருப்பதிப்படும் வகையில் முடிவை நாங்கள் நிச்சயம் எடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

Leave a comment