என்னைப் பற்றி பேசினால் அவரது காரியங்களை வெளியே சொல்வேன் – அமைச்சர் பி.தங்கமணி

325 0

“என்னை நிதானம் இல்லாதவர் என்று பேசினால், அவரது காரியங்களை வெளியே சொல்வேன்” என்று டி.டி.வி.தினகரன் பற்றி அவரது பெயரை குறிப்பிடாமல் சட்டசபையில் அமைச்சர் பி.தங்கமணி ஆவேசமாக பேசினார். 

தமிழக சட்டசபையில் எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகியவற்றின் மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு அந்த துறைகளின் அமைச்சர் பி.தங்கமணி பதிலளித்துப் பேசினார். அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மக்களின் எண்ணத்துக்கு ஏற்ப, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுகின்ற அளவுக்கு உடனடியாக அரசாணையை முதல்-அமைச்சர் வெளியிட்டுவிட்டார். அவர்களால் (தி.மு.க.வினர்) அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

முதல்-அமைச்சர் அளித்த விளக்கத்துக்குப் பிறகு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அரசாணை மட்டும் போதாது, அமைச்சரவையை கூட்டி அரசாணை வெளியிட வேண்டும் என்று சொல்லிவிட்டு வெளியேறினர்.

இந்த முதல்அமைச்சர் இருக்கும் வரை சட்டமன்றத்துக்குள் நாங்கள் வரமாட்டோம் என்று அவர்கள் கூறினால், இந்த முதல்-அமைச்சரால்தான் தூத்துக்குடி மக்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட முதல்- அமைச்சரை பதவி விலக வேண்டும் என்று சொல்பவர்களை எப்படி நாங்கள் சட்டமன்றத்துக்கு அழைக்க முடியும்? ஒரு கோரிக்கைக்காக எதிர்க்கட்சியினர் வெளியே சென்றுவிட்டால், அவர்களை மீண்டும் வாருங்கள் என்று உள்ளே அழைக்கலாம்.

ஆனால் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று முயற்சித்தும் முடியாமல் போய், இப்போது முதல்-அமைச்சரின் ராஜினாமாவை கேட்கிறார்கள். ராஜினாமா செய்தால்தான் வருவோம் என்று சொன்னால், அவர்கள் எப்போதும் சட்டமன்றத்துக்கு வரமாட்டார்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கலைத்துவிடவேண்டும் என்ற நோக்கத்தில், செங்கற்களை உருவினால் கட்டிடம் முழுமையாக விழுந்துவிடும் என்ற எண்ணத்தில் உருவிப் பார்த்தார்கள். ஆனால் முடியவில்லை.

ஜெயலலிதா எனக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பதவியை கொடுத்தார். ஆனால் அம்மாவின் ஆட்சி அமைப்போம் என்று சொல்பவர்களும், அம்மாவுடைய வாரிசு நாங்கள்தான் என்று சொல்பவர்களும் அந்த பதவியை கொச்சைப்படுத்துகிறார்கள்.

அந்த வகையில், என்னை டாஸ்மாக் அமைச்சர் என்று கொச்சைப்படுத்துகின்றனர். ஒன்றரை கோடி கழகத் தொண்டர்கள் மத்தியில் நாங்கள் இருக்கிறோம். எத்தனை பேர் வந்தாலும் அதைப்பற்றி கவலைப்படமாட்டோம்.

அவர்களுடைய சுயரூபத்தை புரிந்து கொண்டிருக்கிறார்கள். டாஸ்மாக் அமைச்சர் நிதானம் இல்லாமல் பேசுகிறார் என்று என்னைப்பற்றி தரக்குறைவாக சொல்லுகின்றார். ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. அது எங்கள் தெய்வம் எனக்குக் கொடுத்த பதவி.

சட்டசபையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்வுக்குப் பிறகு (டி.டி.வி.தினகரனை ஒருமையில் பேசிய நிகழ்வு) என்னால் தொலைபேசியை எடுக்க முடியவில்லை. ஏனென்றால் பல அழைப்புகளில் என்னை கடுமையாக திட்டி, கேவலமாக பேசுகின்றனர்.

‘வாய்ஸ் ஆப்’ல் எவ்வளவு கேவலமாக விமர்சிக்க முடியுமோ அவ்வளவு கேவலமாக விமர்சிக்கின்றனர். எதைக் கண்டும் பயப்படமாட்டோம். வேறு யாரைக் கண்டும் நாங்கள் பயப்படவேண்டிய அவசியமும் இல்லை.

என்னை நிதானம் இல்லாதவர் என்று பேசுபவர்கள்தான் நிதானம் இல்லாமல் இருப்பார்கள். எனது தொகுதி மக்களுக்கு என்னைப் பற்றி தெரியும். கடவுளுக்கும் தெரியும். ஜெயலலிதாவின் முகத்தை காட்டிதான் 48 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். ஹவாலா மூலம் 20 ரூபாய் நோட்டை காட்டி வெற்றி பெற்றவன் நான் அல்ல.

ஹவாலாவில் ஜெயித்தவர்கள் வேண்டுமானால் என்னவெல்லாமோ சொல்லலாம். அவர்களுக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டது. ஆகையால் எதையாவது பேசி, பத்திரிகை, டி.வி.யில் காட்டினால் உண்மையாகிவிடும் என்று நினைத்து அப்படி பேசுகிறார்கள்.

என்னை நிதானம் இல்லாதவர் என்று சொல்பவர்களுக்கு ஒரு தகுதி வேண்டும். ஒரு சாராய ஆலையின் அதிபர் இதைச் சொல்கிறார் என்றால், அதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

அவர் இத்துடன் அந்த வார்த்தைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் நானும் என்னுடைய வார்த்தைகளை நிறுத்திக்கொள்வேன். நிதானம் இல்லாதவர் என்று பேசினால், அவர் என்னென்ன காரியங்களை செய்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியும், அதை நானும் சொல்ல வேண்டியது வரும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Leave a comment