பினிஸ் பறவைகளாய் எழுவோம்!

1091 0

“வாசிப்பு ஒருவனை எப்போதும் தயாராக இருப்பவனாக உருவாக்குகிறது” என்கிறார் பிரான்சிஸ் பேகன் என்ற பேரறிஞர். வாழ்க்கையின் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளுகிற பேராற்றலைப் புத்தகங்கள் புகட்டுகின்றன. அந்த புத்தகங்களை தன்னகத்தே கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான யாழ். நூலகம் தமிழர்களை ஆற்றல் மிக்கவர்களாக அறிவு ஜீவிகளாக மிளிரச் செய்தது.

ஈழத்தீவில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாத சிங்கள ஏகாதிபத்தியம் தமிழர்களை அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடு படத் தொடங்கியது . அவ் வேளை தமிழர்களின் நிமிர்வுக்கு காரணம் தேடியது.

அறிவுச்சுரக்கமான யாழ். நூலகமே நிமிர்வுக்கான காரணம் என சரியாக இனம் கண்டு கொண்டது சிங்கள ஏகாதிபத்திய அரசாங்கம். எனவே, “ஓர் இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி” என்ற கோட்பாட்டை தனதாக்கிய இன வெறி அரசாங்கம் , இரு இனவெறி சிங்கள அமைச்சர்களான காமினி திசநாயக்கா, சிறில் மத்தியூ ஆகியோருடன் , காடையர்களையும் குண்டர்களையும் யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தது . அவர்கள் 1981ஆம் ஆண்டு மே மாதம் 31நாள் இரவு தமிழ் மக்களின் புலமைச் சொத்தான யாழ் நூலகத்தை எரித்துச் சாம்பலாக்கினர்.

1956, 1958, 1977 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு தமிழினத்தின் பக்க வேர்களையே பதம் பார்த்தது. ஆனால், 1981 ஆம் ஆண்டு நூலக எரிப்பானது தமிழரின் ஆணிவேரையே ஆட்டம் காண வைத்தது.

“பொது நூலக எரிப்பானது, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அடக்குமுறைமிக்க அரசுக்கு எதிராகத் திருப்பியது.”  என்றார் பேராசிரியர் சிவத்தம்பி. உண்மையில் இன விடுதலைப் போராட்டம் கூர்மையடைவதற்கு இதுவே காரணமானது.

சூழ்ச்சிகளால் நசுக்கப்ட்ட உரிமைப் போராட்டம் மீண்டும் பயணிப்பதற்கு இஸ்ரேல் நாட்டின் புலனாய்வு அமைப்பின் வாசகமே ஈழத்தமிழர்களுக்கும் பாடமாக அமையும். “சிறியனவும் பெரியனவுமான நாடுகளின் காலம் ஒன்று வரும் . அங்கு அறிவுதான் தற்காப்பு அரணாக அமையும்” என்பதே .ஆகவே, ஈழ தமிழினம் தன்னை அறிவால் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

திரைகடல் ஓடித் திரவியம் தேடும் தமிழர்களே! தாயகம் நோக்கிய பயணத்திற்கு உங்கள் அறிவை பெருக்கிக் கொள்ளுங்கள்! எட்டுத் திக்கும் சென்று அறிவை வளந்துக்ககொண்டிருக்கும் தமிழ் இனமே தயாகத்தில் சந்திப்போம்.

 

Leave a comment