எண்ணூரில் நிலக்கரி சேமிப்பு கிடங்கு விரிவாக்கம் – மறுபரிசீலனை செய்ய கமல்ஹாசன் வலியுறுத்தல்

2489 0

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நிலக்கரி சேமிப்பு கிடங்கு விரிவாக்கம் செய்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கமல்ஹாசன் கடிதம் அனுப்பியுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக்குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் 3-ம் கட்ட விரிவாக்க நிபுணர் மதிப்பீட்டுக்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) நடக்க உள்ளது. கடற்கரைக்கு முன்னால் உள்ள சதுப்பு நிலத்தை தொழிற்சாலை நிலமாக மாற்றி நிலக்கரி சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கு சட்டவிரோதமாக பரிசீலித்து வருகிறீர்கள். இது பேராபத்தை ஏற்படுத்துவதுடன், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும். எனவே இந்த திட்டத்தை நீரோட்டத்தை தடுக்காத வகையில் இன்னொரு இடத்தில் செயல்படுத்தலாம்.

எண்ணூர் கழிமுகப்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால் வெள்ளப்பெருக்கு சமயத்தில் சென்னைவாசிகளுக்கு மேலும் தீங்கு ஏற்படும். பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும். எனவே நிபுணர் மதிப்பீட்டுக்குழு கூட்டத்தில் எண்ணூர் காமராஜர் துறைமுக விரிவாக்க பணிகள் குறித்து பரிசீலிக்கக்கூடாது. முதலில் 2 நபர் துணைக்குழு கடந்த ஜனவரி மாதம் ஆய்வு நடத்தியது தொடர்பான அறிக்கையை வெளியிடவேண்டும். அதன் பின்னர் அதுதொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு அனுமதிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment