காவிரி ஆற்றில் இறங்கியவரை முதலை கடித்துக்கொன்றது!

267 0

கர்நாடகாவில் மாண்டியா மாவட்டத்தின் முதாதி பகுதி வழியாக காவிரி ஆறு பாய்கிறது. சுற்றுலாத்தலமான முதாதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து காவிரி ஆற்றில் குளித்து, அங்குள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் பெங்களூருவின் கேசரகட்டா பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 52) என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேற்று முன்தினம் முதாதிக்கு சுற்றுலா சென்றார். அங்கு அவர் காவிரி ஆற்றில் இறங்கி நீந்திக்கொண்டு இருந்தார்.

அப்போது ஆற்று நீரில் கிடந்த முதலை ஒன்று, திடீரென வெங்கடேசை கடித்தது. பின்னர் அவரை ஆற்றின் ஆழமான பகுதிக்கு இழுத்துச்சென்றது. இதைப்பார்த்த உள்ளூர் வாலிபர்கள் சிலர் நீளமான கம்புகளுடன் ஆற்றில் இறங்கி முதலையை தாக்கினர். இதனால் வெங்கடேசை விட்டு விட்டு முதலை தப்பி ஓடியது. பின்னர் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் அவர் இறந்திருந்தார். அவரது இடது கால் துண்டாகி இருந்தது. மேலும் முதலை கடித்ததில் அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதாதியில் இத்தகைய சம்பவம் நடைபெறுவது இதுவே முதல்முறை என சுற்றுச்சூழல் வல்லுனர்கள் தெரிவித்தனர்.

Leave a comment