விழுப்புரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கேட்கும் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது – சுப்ரீம் கோர்ட்

243 0

விழுப்புரம் மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக்கேட்டு தொடரப்பட்ட வழக்கில், அவசரமாக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மனுவை தள்ளுப்படி செய்தனர்.

தமிழகத்தில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையை விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கக்கேட்டு ஜெயகுமார் என்ற வக்கீல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அவரது மனுவை கடந்த டிசம்பர் மாதம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து வக்கீல் ஜெயகுமார் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அவர் கூறுகையில், ‘தமிழ்நாட்டிலேயே கிராமப்புறத்தில் வசிக்கும் மக்களின் விகிதாச்சாரம் அதிகமாக கொண்ட மிகப்பெரிய மாவட்டம் விழுப்புரம். இந்த மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக்கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு சரியாக விசாரிக்க தவறியுள்ளது. எனவே சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிட்டு இருந்தார்.

இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், சந்தான கவுடர் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு மனுதாரர் சார்பில் நேற்று வக்கீல் கே.கே.எஸ்.கிருஷ்ணராஜ் ஆஜராகி இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் அடுத்த வாரம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

Leave a comment