தூத்துக்குடியில் நள்ளிரவு முதல் இணைய சேவை வழங்கப்பட்டது

499 0

ஸ்டெர்லைட் போராட்டத்தால் தூத்துக்குடியில் முடக்கப்பட்ட இணைய சேவை நேற்று நள்ளிரவு முதல் வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
பேரணியாக சென்ற பொதுமக்களை போலீசார் தடுத்தபோது அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் உண்டானது. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டார். மாவட்டத்தில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டதால், ஓரளவு இயல்பு நிலை திரும்பியது. இன்று காலை தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீக்கப்பட்டது.
இதற்கிடையே, காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி) டி.கே ராஜேந்திரன் நேற்று தூத்துக்குடிக்கு வருகை தந்தார்.
அரசு பொது மருத்துவமனைக்கு சென்ற அவர், அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார். அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நள்ளிரவு முதல் இணைய சேவை மீண்டும் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் போராட்டத்தால் தூத்துக்குடியில் முடக்கப்பட்ட இணைய சேவை நேற்று நள்ளிரவு முதல் மீண்டும்  வழங்கப்பட்டது.

Leave a comment