அயர்லாந்தில் கருக்கலைப்பு சட்டங்களை மாற்ற 66 சதவீதம் மக்கள் ஆதரவு

592 0

அயர்லாந்தில் கருக்கலைப்பு தடைச்சட்டத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் கருக்கலைப்புக்கு ஆதரவாக 66 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. கருக்கலைப்பு குறித்து கடினமான சட்டம் நடைமுறையில் உள்ளது. கர்ப்பிணித் தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய சட்டம் அனுமதிக்கிறது.
கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றம் என்பதால், உரிய நேரத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாமல், இந்திய வம்சாவளி பல் மருத்துவர் சவிதா 2012ம் ஆண்டு உயிரிழந்தார். இது அயர்லாந்து மக்களிடையே  அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
அத்துடன், கருக்கலைப்பு சட்டத்தை மறுவரையறை செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் பேரணி நடத்தினர். இதையடுத்து சட்டத்தை மாற்ற அரசு முன்வந்தது. அதன்படி கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக, மக்கள் கருத்தினை அறியும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதற்காக நாடு முழுவதும் 6,500 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை முதல் மாலை வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் கருக்கலைப்புக்கு ஆதரவாக சுமார் 66 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இதையடுத்து, இந்த கடுமையான கருக்கலைப்பு தடைச்சட்டத்தை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

Leave a comment