மார்ச் 27-ல் இருந்து முதல் உலை செயல்படவில்லை – ஸ்டெர்லைட் நிறுவனம் விளக்கம்

196 0

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு அந்நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கையில், மார்ச் 27-ம் தேதியில் இருந்து முதல் உலை இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் கடந்த 1993-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பின் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு அப்போது இருந்தே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிறுவனத்திலிருந்து வெளிவந்த கழிவுகள் காரணமாக அப்பகுதியில் விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் பாதிகப்பட்டனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனம் ஆலை விரிவாக்கப் பணிகளுக்காக ஒப்புதல் வேண்டி விண்ணப்பித்திருந்தது. இதனை எதிர்த்து கடந்த 100 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் மக்களின் போராட்டம் கலவரமாக வெடித்ததில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், மத்திய அரசும், உள்துறை அமைச்சகமும் துப்பாக்கிச்சூடு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

இந்நிலையில், பங்கு முதலீட்டாளர்கள் வேதாந்தா குழுமத்தின் பங்குகளை வாங்குவதில் தயக்கம் காட்ட துவங்கியுள்ளனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் நிறுவனம் தேசிய மற்றும் மும்பை பங்கு சந்தைகளுக்கு எழுத்துப்பூர்வமான விளக்கம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், கடந்த மார்ச் 27-ம் தேதி இருந்து முதல் உலை இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு முதல் உலை மூடப்பட்டதாகவும், மூடப்பட்ட உலையின் தற்போதைய மதிப்பு ரூ.2100 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தீர்ப்பு வெளியான பின்பே முடிவு தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment