துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

209 0

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தினார். 

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் தெகலான் பாகவி ஆகியோர் நேற்று தனித்தனியாக தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, நிருபர்களுக்கு தனித்தனியாக பேட்டி அளித்தனர்.

அப்போது, திருநாவுக்கரசர் கூறியதாவது:-

அராஜகமாக, காட்டுமிராண்டித்தனமாக போலீசார் நடந்து இருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டதில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்தனர். 100-வது நாள் நடந்த போராட்டத்தில் 5 கிலோமீட்டர் தூரம் வரை அமைதியாக வந்துள்ளனர்.

குறிப்பிட்ட இடத்திற்கு வந்த பிறகு போலீசார் துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதில் 12 பேர் இறந்துள்ளனர். ஜனநாயக நாட்டில் அறவழியில் நடந்த போராட்டத்திற்கு தீர்வு காணாமல் துப்பாக்கி குண்டுகள் மூலம் முடிவு கட்ட முயற்சி செய்து உள்ளனர். பாசிச ஆட்சி போல் இத்தனை பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு மூல காரணமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், “இந்த சம்பவத்துக்கு காரணமான மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் துப்பாக்கி சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது. இந்த வன்முறைக்கு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி கூறுகையில், “துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழக அரசு, காவல்துறை சேர்ந்து பொதுமக்கள் மீது கொலை வெறி தாக்குதலை நடத்தி உள்ளது. காவல்துறை திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டு உள்ளது. காக்கை, குருவிகளை போல், மனிதர்களை படுகொலை செய்து உள்ளனர். இதற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும். அதேபோல், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்” என்றார்.

Leave a comment