அரபாத் மலையில் 20 லட்சம் இஸ்லாமியர்கள் குவிந்தனர்

321 0

201609121023316904_drones-keep-watch-as-pilgrims-ascend-mount-arafat-for-haj_secvpf20 லட்சம் முஸ்லிம்கள் திரண்டிருக்கும் ஹஜ் புனித யாத்திரையில் அசம்பாவிதங்கள் நேராமல் இருக்க ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு உள்ளிட்ட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை சவுதி அரசு செய்துள்ளது.

இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்தாவது மற்றும் இறுதி புனிதக்கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித மெக்கா நகரில் ஆண்டுதோறும் 5 நாட்கள் ஹஜ் புனித யாத்திரை நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பயணிகள் முஹம்மது நபியின் பிறந்த ஊரான மக்கா, மற்றும் அவரது நினைவிடம் அமைந்துள்ள மதினா நகரங்களுக்கு புனித யாத்திரை செல்கின்றனர்.

இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக உலகம் முழுவதிலும் இருந்து மெக்கா நகரில் சுமார் 20 லட்சம் இஸ்லாமியர்கள் இங்கு குவிந்துள்ளனர். இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 1.36 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.  இவர்களுடன் சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருலட்சம் பேரும் பங்கேற்கிறார்கள்.

மக்கா நகரில் உள்ள பெரிய மசூதியில் தொழுகை மற்றும் வேண்டுதலை நிறைவேற்றிய பின்னர், நேற்று மினா நகருக்கு புறப்பட்டு சென்ற யாத்ரீகர்கள், அங்கு சில சம்பிரதாயங்களை நிறைவேற்றிவிட்டு அரபா மலையில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று (திங்கட்கிழமை) புறப்பட்டு சென்றனர்.

இறைவனின் கட்டளையை ஏற்று இறைத்தூதரான இபுறாஹிம் நபி, தனது ஒரே மகனான இஸ்மாயீலை பலியிட சித்தமான வரலாற்றை நினைவுகூரும் அரபாத் மலையை வலம்வந்த பின்னர், முசதல்பியா என்ற வெட்டவெளியில் கூழாங்கற்களை சேகரித்து, ஜம்ராத் என்ற இடத்தில் தீயமன ஆசைகளான சாத்தான் மீது கல்லெறியும் சம்பிரதாயத்தை இன்று  யாத்ரீகர்கள் நிறைவேற்றுகின்றனர்.

பின்னர், தங்களது விருப்பம்போல் ஆடு மற்றும் ஒட்டகங்களை ‘குர்பானி’ (இறைவனின் பெயரால் புனிதப் பலி) செய்துவிட்டு, தங்களது பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டவர்களாக – அன்று பிறந்த குழந்தையைப் போல் ‘ஹாஜி’ என்ற பட்டத்துடன் தங்களது இல்லங்களுக்கு புறப்பட்டுச் செல்வர்.

ஹஜ் யாத்திரைக்காக ஏராளமான மக்கள் குவிந்துள்ளதால் புனித நகரங்களான மெக்கா, மதினாவை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின்போது மக்காவில் உள்ள பெரிய மசூதி வளாகத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்து மற்றும் சாத்தான் மீது கல்லெறியும் சம்பிரதாயத்தின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி சுமார் 2 ஆயிரம் யாத்ரீகர்கள் பலியானதுபோல் இந்த ஆண்டு அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் இருக்கும் பொருட்டு சவுதி அரசு பல்வேறுகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

எதிர்பாராத விளைவுகளைத் தவிர்க்கும் நோக்கில் புனிதப் பயணிகள் அனைவருக்கும் மின்னியல் கைப்பட்டை வழங்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமுள்ள இடங்களை அறிந்து புனிதப் பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை வகுத்துக்கொள்ள அது உதவும்.

புனித மக்காவில் மட்டும் 800-க்கும் அதிகமான சுற்றுப்புறக் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புனித யாத்திரையில் பங்கேற்றுள்ள பயணிகள் வசதிக்காக மெக்கா, மதீனா நகரங்களில் 18 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. யாத்திரை செல்பவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டால் அவர்கள் தங்கி சிகிச்சை பெற 158 இடங்களில் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் 25 ஆஸ்பத்திரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவை தவிர 100 ஆம்புலன்ஸ்கள், மருத்துவ வசதியுடன் கூடிய 51 பஸ்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன.

அவசரகால உதவிக்காக 17 ஆயிரம் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். யாத்திரையின் இறுதி நாளன்று யாத்திரீகர்களுக்கு வினியோகிக்க 15 லட்சம் கன்டெய்னர்களில் மெக்காவின் ‘ஜம் ஜம்’ புனிதநீர் தயாராக வைக்கப்பட்டுள்ளது. ஹஜ் யாத்திரையை முன்னிட்டு சவுதி அரேபியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள்.  அவர்களில் சுமார் 400 பேர் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள். ஹஜ் யாத்ரீகர்களுக்கு சவுதி அரேபியா அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவில்லை என்று குற்றம் சாட்டிய ஈரான், இந்த ஆண்டு தனது நாட்டை சேர்ந்த யாரையும் மெக்காவுக்கு செல்ல அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.