போர்க் குற்றவாளிகள் சுதந்திரமாக உலாவருகிறார்கள் – ஜெனீவாவில் கோகிலவாணி

542 0

48b04600-81ef-46d3-9e59-04ca64ce435d_1080“இலங்கையின் போர்க் குற்றவாளிகள் மக்கள் மத்தியில் சுதந்திரமாக உலாவருகிறார்கள். உலகம் முழுவதும் வாழும் போர்க் குற்றவாளிகளுக்கு இச் சூழல் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. தாங்கள் விரும்பிய எந்தப் படுகொலைகளையும் நடத்தி முடித்துவிட்டு தப்பிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்துள்ளது” என முன்னாள் போராளியும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டவருமான கோகிலவாணி தெரிவித்திருக்கின்றார்.

ஜெனீவாவில் நடைபெறும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரை முன்னிட்டு ஜெனீவா பத்திரிகையாளர் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்தார். “ஐ.நா மனித உரிமைப் பேரவையும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் பொறுப்புக்கூறுதலும்” என்ற தலைப்பில் அவரது உரை இடம்பெற்றது. அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

“இலங்கையில் நடைபெற்ற ஆட்சிமாற்றம் என்பது அந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கியமானது என்பதில் இரண்டாவது கருத்திற்கு இடமிருக்க முடியாது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஆட்சி மாற்றம் என்பது அடிப்படை ஜனநாயகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் கூறும் ஜனநாயகம் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைக்கும், நல்லிணக்கத்திற்கும் எந்த வகையிலும் தொடர்பற்றது. அடிப்படையில் அந்த ஜனநாயகம் சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.

பெரும்பாலான சிங்கள மக்கள் பௌத்த சிங்கள மேலாதிக்கவாத சிந்தனையால் நச்சூட்டப்பட்டிருக்கிறார்கள். இலங்கையில் நல்லிணக்கம் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு உரிமை வழங்கப்படுவதற்கு, அந்த நாட்டின் அதிகாரவர்க்கம் சிங்கள மக்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்குப் பதிலாக சிங்கள பௌத்த அதிகாரவர்க்கம் சிங்கள மக்களின் வாக்குகளிலேயே தங்கியிருக்கின்றது. இலங்கையில் தேசிய இனங்களுக்கிடையேயான உறவு நிலச் சமன்பாட்டில் சிங்கள மக்கள் பிரதானமானவர்கள், ஆக, இலங்கையில் ஜனநாயக சக்திகள் சிங்கள பௌத்த மனோ நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியமானதாகும்.

அவ்வாறு ஒரு மாற்றம் நடைபெறும் வரைக்கும் ஆட்சி மாற்றம் தமிழ் மக்களுக்கான ஜனநாயகமாக இருக்கமுடியாது. இலங்கை அரசைப் பொறுத்தவரை, அங்கு வர்த்தகம் நடைபெறும் சூழலை ஏற்படுத்துவதற்கான ஜனநாயகத்தை ஏற்படுத்துவது மட்டுமே போதுமானதாகக் கருதுகிறது. அந்த ஜனநாயகம், பெரும் வியாபார நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு முதலீடுகளுக்கும் தேவையானதாக அமைகிறது. அவ்வாறு வியாபார நோக்கில் உருவாக்கப்பட்ட ஜனநாயகம் சில வேளைகளில் சாதாரண இலங்கை மக்களுக்கும் சென்றடைகின்றது. ஆனால் இலங்கையில் இன்று காணப்படும் ஜனநாயகம் மக்களுக்கானதல்ல என்பதை இங்கு கவனிக்கவேண்டும்.

இலங்கை அரசின் இன்றைய நோக்கம் ஏகாதிபத்தியங்கள் சார்ந்த வியாபார வெளி ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே தவிர, தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனத்திற்கு உரிமை வழங்குவதல்ல. நீங்கள் இப்போது கேள்வியெழுப்பலாம். இலங்கை அரசிற்கு எதிரான எதிர்ப்பு அரசியலைப் பிரதிநிதித்துவம் செய்யும் நான் எனது ஐ.நா உரையின் பின்னர் எப்படி இலங்கை திரும்பிச் செல்லலாம் என்பதே அக்கேள்வி. நான் முதலில் குறிப்பிட்டது போன்று, வியாபார நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஜனநாயகம் ஆங்காங்கு சில உரிமைகளை மட்டும் வழங்கியிருக்கிறது என்பது உண்மையாயினும், அது எமது முழுமையான உரிமையை உறுதிசெய்யவில்லை என்பதே உண்மை.

சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடிப்படை உரித்துக்களான கலாசாரம், பிரதேசம், பொருளாதாரம் என்பன இன்றும் இலங்கை அரசால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றது. ‘நல்லாட்சி அரசு எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் இலங்கை அரசின் பின்னணியிலுள்ள உண்மை நிலை இதுதான். பல்வேறு வழிகளில் நிலப்பறிப்பு இன்றும் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒரு புறத்தில் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள சிறிய நிலப்பகுதிகளை விடுவித்தாலும், மறுபுறத்தில் திட்டமிட்ட வகையில் தமிழர்களின் நிலங்கள் அபிவிருத்தி என்ற பெயரில் தட்டிப்பறிக்கப்படுகின்றது.

வட கிழக்கில் சிங்களப் பிரதிநிதிகளின் தொகையை அதிகப்படுத்தும் வகையில் தேர்தல் தொகுதிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. அந்த மாற்றங்களுக்கும் சிங்கள பௌத்த அரசின் நிலப்பறிப்பிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. சிறுபான்மைத் தேசிய இனங்களில் கலாச்சாரம் பல்வேறு வழிகளில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. நல்லிணக்கம் பற்றிப் பேசும் ‘நல்லாட்சி அரசின் ஆட்சியில் ‘ தமிழ்ப் பகுதிகள் எங்கும் பௌத்த சின்னங்கள் முளைவிடுகின்றன. தமிழர்கள் பௌத்ததிற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் சிங்கள பௌத்த சிந்தனை கோலோச்சும் ஒரு நாட்டில் இவ்வாறான நடவடிக்கைகள் ஆக்கிரமிபாகவே கருதமுடியும்.

தமிழ்ப் பகுதிகளில் பொருளாதாரக் கட்டுமானங்கள் அற்ற நிலையில் அபிவிருத்தி என்ற பெயரில் சிங்கள பௌத்த மனோ நிலையிலிருந்து பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழர்களின் உரித்துப் பற்றி எந்தக் கரிசனையுமின்றி தமிழர்களின் நிலங்களும் சொத்துக்களும் சூறையாடப்படுகின்றன. ஒரு வியாபாரச் சூழலில் இந்த நடவடிக்கைகள் சாதாரணமானவை போலத் தோன்றினாலும், சிங்கள பௌத்த பேரினவாத அரசு ஆட்சி நடத்தும் ஒரு நாட்டில் இவை அனைத்தும் தமிழ் மக்களின் இருப்பு மீதான அச்சுறுத்தலாகவே கருதப்படும்.

அறுபது வருடங்களாக நடைபெறும் தேசிய இன ஒடுக்குமுறை ஆட்சி மாற்றத்தால் எந்த வகையிலும் குறைவடையவில்லை. குண்டுவீச்சு, ஷெல் தாகுதல்கள் போன்ற அழிப்புகளிலிருந்த தமிழர்கள் தற்காலிகமாக விடுதலை பெற்றுள்ளதாகக் கருதினாலும், எப்போதும் எதுவும் நடக்கலாம் என்ற நிலையற்ற தன்மையே அனைத்துச் சிறுபான்மைத் தேசிய இனங்களின் மத்தியிலும் காணப்படுகின்றது. இதனால் நாளாந்த வாழ்க்கையிலிருந்து, போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் நடவடிக்கை வரைக்கும், இலங்கை அரசு அனைத்திலும் தோல்வியடைந்திருக்கிறது.

சிங்கள பௌத்த சிந்தனையிலிருந்து கட்டமைக்கப்பட்ட உள்ளூர் அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொள்ளாது ஐ.நா மனித உரிமைப் பேரவை போர்க்குற்றங்களுக்குப் விசாரணை நடத்தும் பொறுப்பை இலங்கை அரசிடமே ஒப்படைத்திருக்கின்றது. மேற்கு வல்லரசுகளைத் திருப்திப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கும் இலங்கை அரசு, சிங்கள் மக்களுக்கு உண்மையைக் கூறி அவர்களை மாற்றத் துணிவதில்லை. நல்லாட்சி என்பது உண்மையாயின் முதலில் சிங்கள மக்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக சிங்கள மக்களைப் பேரினவாதிகளாக வைத்திருப்பதையே இலங்கை அரசு விரும்புகிறது.

தவிர இலங்கை அரசின் ஊதுகுழலாகச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்க்கட்சியாகக் கொண்ட எதிர்ப்பற்ற அரசு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு சூழல் பாசிச அரசு தோன்றுவதற்கான அறிகுறிகளாகும். சிங்கள மக்களுக்கு உண்மை மறைக்கப்பட்டு அவர்களுக்கு இலங்கை அரசு இன்னும் பேரினவாத நஞ்ச்சூட்டி வருகின்றது. சிங்கள மக்களுக்கு போர்க்குற்றம் தொடர்பான உண்மையைத் தெரிவிக்காமல் ஐ.நா மனித உரிமைப் பேரவை தெரிவிக்கும் கலப்பு நீதிமன்றம் சாத்தியமற்றதாகும். பெரும்பான்மை இலங்கை மக்களின் ஆதரவின்றி அவர்களின் வாக்குப்பலத்தில் தங்கியிருக்கும் சிங்கள பௌத்த அரசு நீதி விசாரணை நடத்த முடியாது. தவிர, சிங்கள மக்களை மேலும் பேரினவாதிகளாகப் பேணவே அரசு முயல்கின்றது.

இந்த நிலையில் ஐ.நா முன்மொழிந்த போர்க்குற்ற விசாரணையில் எமக்கு நம்பிக்கை இல்லை. ஐ.நாவின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவரும் சூழல் ஆபத்தானதாகும். சுய நிர்ணைய உரிமை கோரிப் போராடிய தமிழ்த் தேசிய இனம் தொடர்ந்தும் தாக்குதலுக்கு உள்ளவதாகவே மக்கள் உணர்கிறார்கள். இலங்கையின் போர்க்குற்றவாளிகள் மக்கள் மத்தியில் சுதந்திரமாக உலாவருகிறார்கள். உலகம் முழுவதும் வாழும் போர்க்குற்றவாளிகளுக்கு இச் சூழல் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. தாங்கள் விரும்பிய எந்தப் படுகொலைகளையும் நடத்தி முடித்துவிட்டு தப்பிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் இலங்கையில் போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க, மனித உரிமைவாதிகள், ஜனநாயகவாதிகள் போன்றோர், இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து உலக மக்களையும் எம்மோடு கைகோர்த்துக்கொள்ளுமாறு அழைக்கிறேன்.”

Leave a comment