முள்ளிவாய்க்கால்: தொடரும் தீராத சோகம்!

541 0

‘உயிர் போய்விடுமே எண்டு பயந்துதான் நாங்கள் ஓடினோம். ஆனால் சாவை நோக்கித்தான் அந்த ஓட்டம் இருந்தது என்றது அந்த நேரம் எங்களில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை’ என்று முள்ளிவாய்க்காலை நோக்கிய மரண ஓட்டத்தைப் பற்றி மகாலிங்கம் சிவநேசன் கூறுகின்றார்.

வகைதொகையின்றி பொதுமக்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் இருந்து தெய்வாதீனமாக உயிர்தப்பி இருப்பவர்களில் சிவநேசனும் ஒருவர். அவர் தனது மனைவியையும் ஒரு குழந்தையையும் ஒரு எறிகணை தாக்குதலில் பறிகொடுத்திருக்கின்றார். அந்த சம்பவத்தில் அவரும் படுகாயமடைந்தார். சிறிவந்த எறிகணையின் துண்டு ஒன்று வலது தொடையில் பாய்ந்து எலும்பை முறித்து, அந்தக் காலையே பறித்துவிட்டது. நான்கு பேரைக் கெண்ட அந்தக் குடும்பத்தில் அவரும் மறறுமொரு பெண் குழந்iயுமே மிஞ்சியிருக்கின்றனர்.

கிளிநொச்சியைச் சேர்ந்த சிவநேசன் அங்கிருந்து குடும்பத்துடனும் உறவினர்களுடனும் இடம்பெயர்ந்து, நகர்ந்து நகர்ந்து உயிர் தப்பி முள்ளிவாய்க்காலைச் சென்றடைந்திருந்தார். முள்ளிவாய்க்காலில் அகோரமான எறிகணை தாக்குதல்களுடனும் கடலில் இருந்து கடற்படையினர் மேற்கொண்ட பீரங்கிக் குண்டுத் தாக்குதல்களும் எவருக்குமே உயிருக்கு உத்தரவாதமில்லை என பறைசாற்றிக் கொண்டிருந்தன.

உயிரைக் கையில் பிடித்தபடி பங்கருக்குள் பதுங்கியிருந்த வேளை, பங்கர்மீது வீழ்ந்து வெடித்த எறிகணை மனைவியையும் கைக்குழந்தையையும் பலிகொண்டிருந்தது. தந்தையுடன் இருந்த பெண் குழந்தை தெய்வாதீனமாக எந்தவித காயமும் இல்லாமல் உயிர் தப்பியிருந்தது. முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிவநேசன் மோசமான உடல் நிலையுடன் இருந்ததால் கப்பல் மூலமாக புல்மோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆறு வயது நிரம்பிய குழந்தையும் அவருடன் சென்றது. புல்மோட்டையில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கும் பி;ன்னர் அங்கிருந்து மன்னார் வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்ட அவர் ஒன்பது மாதங்களுக்கு மேலாக வைத்தியசாலை வாழ்க்கையே வாழ்ந்து வந்தார்;. மீள்குடியேற்றத்தில் சொந்தக் கிராமத்திற்குத் திரும்பியுள்ள அவர் சிறிய கடை ஒன்றை நடத்தி அதில் வருகின்ற வருமானத்தையே தனது வாழ்க்கைக்கு ஆதாரமாகக் கொண்டிருக்கின்றார்.

‘ஊர்க்கடைதானே. வியாபாரம் பெரிசா இல்லை. ஏதோ கிடைக்கிற ஒரு கொஞ்ச ஆதாயத்திலதான் ரெண்டு பேருடைய சீவியமும் நடக்குது. கைக்கும் வாய்க்கும் சரியா இருக்கு என்ற நிலைமைதான். அவசரம் அந்தரத்துக்கு உதவக் கூட ஒரு சேமிப்பு கிடையாது. மனுசி உயிரோட இருந்தா எனக்கும் குடும்பத்திற்கும் பெரிய உதவியா இருந்திருக்கும்’ கவலை தோய்ந்த குரலில் சிவநேசன் கூறுகின்றார்.

எறிகணை தாக்குதலில் அருகில் இருந்த மனைவியும் குழந்தையும் காயமடைந்து இரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில் உயிரிழந்த காட்சி அவருடைய கண்களில் இருந்து இன்னும் மறையவில்லை. அந்த இழப்பில் இருந்து அவரால் இன்னுமே மீள முடியவில்லை. அந்த சோகத்திற்குள்ளே அவருக்கு உறவு நிலையில் ஆதாரமாக உள்ள பருவமடைந்துள்ள மகளின் எதிர்காலம் குறித்த கவலை அவரை மேலும் வதைத்துக் கொண்டிருக்கின்றது.

‘மனுசியும் இல்லை. வருமானமும் இல்லை. நகைநட்டோ, கையில பணமோ இல்லை. தனிக்கட்டையா நிற்கிற நான் எப்படித்தான் மகளை கரைசேர்க்கப் போகிறேனோ தெரியேல்ல’ என்று கண்களில் ஈரம் கசிய கூறுகின்றார்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை முறியடித்ததுடன் முள்ளிவாய்க்கால் சம்பவங்கள் முடிந்துவிடவில்லை. பேராட்டத்தையே புரட்டிப் போட்ட முள்ளிவாய்க்கால் சம்பவங்கள் அந்த சூழலில் சிக்கியிருந்த எண்ணற்ற குடும்பங்களின் எதிர்காலத்தையும் சின்னாபின்னமாக்கி சிதறடித்திருக்கின்றது.

முள்ளிவாய்க்காலில் மழையென பொழிந்த எறிகணைகளிலும், கடற்பரப்பில் இருந்து வந்த பீரங்கிக் குண்டுகளிலும், இடைவிடாமல் சீறி வந்த துப்பாக்கி வேட்டுக்களிலும் சிக்கி ஆயிரக்கணக்கானவர்கள் மாண்டு போனார்கள். அதேபோன்று எண்ணற்றவர்கள் படுகாயமடைந்து அவயவங்களை இழந்துள்ளார்கள். உற்றவர்களின் உயிர் இழப்பும், மோசமான காயங்கள் எற்படு;த்திய அவயவங்களின் இழப்பும் ஏற்படுத்தியுள்ள மோசமான உளவியல் தாக்கங்களில் இருந்து இன்னும் பலரால் மீள முடியவில்லை.

பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் பரமேஸ்வரி;

சந்திரசேகர் பரமேஸ்வரி நெடுங்கேணியைச் சேர்ந்தவர். சீறி வந்து வீழ்ந்து வெடித்த எறிகணையொன்றிலிந்து சிதறி வந்த உலோகத் துண்டு தாக்கியதில் அவருடைய கணவன் சந்திரசேகர் படுகாயமடைந்தார். மன்பக்கத்தில் பாய்ந்த அந்த உலோகத் துண்டு உடலை வெட்டிக்கொண்டு வெளியில் சென்றிருந்தது. இதனால் நெஞ்சிலும் முதுகுப் பகுதியிலும் அவருக்குப் படுகாயங்கள் எற்பட்டிருந்தன. முள்ளந்தண்டில் ஏற்பட்ட பாதிப்பினால் அவர் இடுப்புக்குக் கீழ் செயலிழந்தவராக சக்கர நாற்காலியில் தஞ்சமடைய நேர்ந்திருக்கின்றது.

சக்கர நாற்காலியே வாழ்க்கையென ஆகிவிட்ட நிலையில் அவரால் குடும்பத்தைப் பராமரிக்க முடியாதவராகியிருக்கின்றார். அவருக்கு ஆறு பிள்ளைகள். ஆறு பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு அவருடைய மனைவி பரமேஸ்வரி குடும்பத்தைக் கொண்டு நடத்த பெரும் பாடுபட வேண்டியிருக்கின்றது.

‘நாலு பொம்பிளைப் பிள்ளைகள். மூத்ததுகள் இரண்டும் ஆம்பிளைப் பிள்ளைகள். ஆம்பிளைகளா வளர்ந்திருக்குதுகளே தவிர குடும்பத்துக்கு உதவுறதில்ல’ என்று ஆதங்கப்படுகிறார் பரமேஸ்வரி. இடப்பெயர்வும் குடும்பத்தின் வறுமை நிலையும் சிறு வயதிலேயே அவர்களின் பாடசாலைக் கல்விக்கு முற்றுப்புள்ளி இட்டிருந்தன. வளர்ந்ததும் கூலி வேலைக்குச் செல்ல ஆரம்பித்து, குடும்பத்துக்கு வெளியிலேயே அவர்களின் கவனம் முழுதும் சென்றுவிட்டது. கூலி வேலையில் கிடைக்கின்ற சம்பளத்தை; தாங்களே பயன்படுத்திக் கொள்வார்கள்.

‘இருந்திட்டு ஆயிரமே ரெண்டாயிரமோ கொண்டு வந்து தருவினம். அவ்வளவுதான் குடும்பத்தில அக்கறை எண்டதே அவைகள் ரெண்டு பேருக்கும் கிடையாது. அவருக்கு ஏலாத நிலைமை. மாசா மாசம் அவருக்கு வைத்தியம் பராமரிப்பு எண்டு மூவாயிரம் நாலாயிரம் ரூபா காசு வேணும். பள்ளிக்கூடம் போற நாலு பொம்பிளப் பிள்ளைகளுக்கும் படிப்புச் செலவையும் சமாளிக்க வேணும். கூலி வேலைக்குப் போனதான் வருமானம் கிடைக்கும். முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவைக்கான உதவியிலையும் கூலி வேலையிலையும்தான் சீவியம் நடக்குது. ஆம்பிளைகள் எக்கேடு கெட்டாலும் என்ன எண்டாலும், பொம்பிளப் பிள்ளைகளின்ர எதிர்காலத்துக்குத்தான் என்ன செய்யிறது எண்டு தெரியேல்ல. ஏலாத புருஷன வச்சுக்கொண்டு வாழ்ற இந்த வாழ்;க்கைய நினைக்கும்போது இரவில நித்திரையே வருகுதில்லை’ என கவலை தோய்ந்த குரலில் கூறுகின்றார் பரமேஸ்வரி.

பரமேஸ்வரியைப் போன்று எத்தனையோ பெண்கள் மோசமான முள்ளிவாய்க்கால் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். முள்ளிவாய்க்கால் அவலம் என்பது மாறத வடுவாக தீராத ஒரு சோகமாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையில் படிந்திருக்கின்றன. அந்த வடு மாற்ற முடியாதது. ஆயினும் மாற்றக் கூடிய சோகத்தைத் தணிப்பதற்கான முய்றசிகள் முன்னெடுக்கப்படவில்லை என்பது உளவியலாளர்களின் கருத்தாக உள்ளது.

மீனாட்சியின் மனக்குமுறல்

‘ஊரைவிட்டு வெளியேறி கிளிநொச்சிக்குப் போகும் வரையும் எங்களுக்கு உயிர் மீது நம்பிக்கை இருந்தது. கிளிநொச்சியிலும் பாதுகாப்பு இல்லை என்று ஆன பிறகு எங்களின்ர இடப்பெயர்வு என்றது மரணத்தை நோக்கிய நகர்வாகவே இருந்தது. முள்ளிவாய்க்கால் வரையில் நாங்கள் அனுபவித்த கஸ்;டங்களும் துயரங்களும் உலகத்தில வேற எவருக்குமே ஏற்படக்கூடாது’ என்று மன்னாரைச் சேர்ந்த மகாலிங்கம் மீனாட்சி கூறுகின்றார்.

இடப்பெயர்வு என்பது மிக மோசமானது. அதிலும் யுத்த மோதல்களுக்கு மத்தியில் உயிரைக் கையில் பிடித்தபடி இடம்பெயர்ந்து செல்வது என்பது மிக மிக மோசமானது. பார்;வை இழந்த நிலையில் மற்றவர்களின் தயவில் நடமாடவும் செயற்படவும் வேண்டியுள்ளவர்களின் நிலைமை பற்றி விளக்கிக் கூற வேண்டிய அவசியமில்லை. அதுவும் பெண்ணாக இருந்துவிட்டால்…….? நிலைமை என்னவாக இருந்தது என்பதை மீனாட்சி விளக்கிக் கூறு முற்படுகின்றார்.
கிளிநொச்சியில் இருந்து தர்மபுரம், விஸ்வமடு என்று ஊர் ஊராக மக்கள் இடம்பெயர்ந்து சென்றார்கள். அவர்களோடு இடம்பெயர்ந்து சென்ற மீனாட்சி இறுதியாக முள்ளிவாய்க்காலைச் சென்றடைந்தபோது, குடும்பத்தினர், குடும்ப உறவினர்கள் என்று பத்துக்கும் மேற்பட்டவர்களை யுத்தம் பலிகொண்டிருந்தது.

முள்ளிவாய்க்கால் நிலைமை மிக மோசமாக இருந்தது. வெளியில் வரவே முடியாத அளவு எறிகணை தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன. போதாக்குறைக்கு கடலில் இருந்து நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல்களும் மக்கள் இருந்த பகுதிகளை நோக்கி நடத்தப்பட்டன.

‘சாப்பாட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்கிறதே கஸ்டமாக இருந்தது. உயிரை வெறுத்து வெளியில போய் வாங்கி வந்த அரிசியை உலையில போடக்கூட முடியாத நிலை. அந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. பங்கர்களுக்குள்ள போனா அவசர தேவைக்குக் கூட வெளியில வரமுடியாது. வெளியில வாறதெண்டது தற்கொலை செய்து கொள்ளுறது மாதிரி எண்டுதான் சொல்ல வேணும்’. என கூறுகின்றார் மீனாட்சி.
யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் கழிந்துவிட்டன. ஆனால் முள்ளிவாய்க்காhல் வாழ்க்கையின் துயரமும், மரண அச்சமும் பாதிக்கப்பட்ட மக்கள் மனங்களில் மறையவே இல்லை.

‘உயிரச்சத்துக்கு மத்தியில் சாப்பிட வேணும்; எண்டதைவிட, இயற்கைத் தேவைகளை நிறைவேற்றுவதே பெரும் பிரச்சினையாக இருந்தது. உயிரை வெறுத்துத்தான் வெளியில் செல்லவேண்டும். வெளியில போய் இருக்கும்போது ரவுண்ஸ் (துப்பாக்கிக் குண்டுகள்) தலைக்கு மேலேயும் போகும். உடலில உரசிக்கொண்டும் போகும். அப்படியான நேரத்தில எத்தனையோ பேர் குண்டடித் தாக்குதலுக்கும் ஷெல் வீச்சுக்கும் ஆளாகி உயிரை இழந்திருக்கினம் எத்தனையோ பேர் காயமடைஞ்சிருக்கினம்.

‘ஒரு தடவை அவசர அவசரமா குளிச்சிட்டு உடுப்பு மாத்தேக்க, ஷெல் வரத் தொடங்கிற்று நாலாபக்கமும் ஷெல் துண்டுகள் பறந்து வந்து கொண்டிருந்தது. நான் அப்படியே நிலத்தில குந்தி இருந்திட்டன். பங்கருக்குப் பக்கத்திலதான் கிணறு. அதால தனியத்தான் நான் போயிருந்தன். முள்ளிவாய்க்காலில் மணற் தரைதானே, நினைச்ச இடத்தில தோண்டின தண்ணி வரும். அதால பங்கருக்குப் பக்கத்திலையே குளிக்கலாம். அப்படித்தான் அண்டைக்கும் நான் குளிச்சிட்டிருந்தன். அண்டையோட வாழ்க்கை முடிஞ்சது எண்டுதான் நினைச்சன். அந்த நினைவில நெஞ்சுக்குள்ள ஏதோ அடைக்கிற மாதிரி இருந்தது. என்ன செய்யிறது எண்டே தெரியேல்ல. அப்பதான் அக்கா ஓடிவந்து என்னை இழுத்து பங்கருக்குள்ள கூட்டிப் போனா’ என நூலிழையில் உயிர்தப்பிய தனது அனுபவத்தை விபரித்தார் மீனாட்சி.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற அகோரமான தாக்குதல்களின்போது பொஸ்பரஸ் குண்டுகளும் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டன என்று கூறப்படுகின்றது. யுத்தம் முடிவை நெருங்கிக் கொண்டிருந்த வேளை, மக்கள் நெருக்கமாக இருந்த இடங்களில்கூட இந்தத் தாக்;குதல் நடத்தப்பட்டது என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

முள்ளிவாய்க்கலிலையும் ஒரே இடத்தில எங்களால இருக்க முடியேல்ல. கண்மூடித்தனமான தாக்குதலால ஒரு இடத்தில இருந்து இன்னோர் இடத்துக்கு மாறி இருக்க வேண்டி இருந்தது. அப்படி இடம் மாறேக்கதான் ஒரு 25 மீற்றர் தூரம் இருக்கும் எண்டு நினைக்கிறன். குண்டுகள் வந்து விழுந்து வெடித்தன. அப்போது ஒரு போதும் இல்லாத வகையில குண்டுப் புகையால கண் எரியத் தொடங்கிற்று. நாங்க நினைச்சம் விஷக்குண்டு போட்டாச்சு. எல்லாருமே அதோட சாகப் போறோம் எண்டு. அந்த நேரம் மூச்சு எடுக்க சிரமமா இருந்திச்சு. மூக்கெல்லாம் எரியிற மாதிரி இருந்தது. துணிய தண்ணியில நனைச்சு முகத்தைத் துடைக்கச் சொல்லி எங்களோ வந்த ஒரு தம்பி சொன்னார். அப்படி செய்தபோதுதான் கண் எரிச்சலும் மூக்கு எரிச்சலும் கொஞ்சம் குறைஞ்சது’ என விஷக்குண்டு என குறிப்பிட்ட குண்டுத் தாக்குதலில் சிக்கி தாங்கள் பட்ட அவஸ்தை பற்றி மீனாட்சி கூறினார்.

வைத்தியசாலைகளும் பாதிக்கப்பட்டன

யுத்த மோதல்களில் மக்கள் சிக்கி அவலப்பட்ட காலத்தில், அரச மருத்துவர்களின் தியாகங்களும் வரையறையற்றன என்று முன்னாள் மருத்துவ போராளியான மிதயா கானவி கூறுகின்றார். இவர் ஓர் எழுத்தாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யுத்தகாலத்தில் முள்ளிவாய்க்கால் வரையில் தொடர்ந்து மருத்துவ பணியாற்றி, யுத்தம் முடிவடைந்ததையடுத்து, இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் அவர் சமூகத்த்pல் இணைக்கப்பட்டார்.
முள்ளிவாய்க்கால் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை அப்போது வைத்தியசாலையாக மாற்றப்பட்டிருந்தது. அரச மருத்தவர்களின் பொறுப்பில் அது இயங்கிக் கொண்டிருந்தது. நாளும் பொழுதும் உயிரிழப்புக்களும் காயமடைபவர்களும் எண்ணிக்கையில் அதிகரித்துக் கொண்டிருந்தன. நிலைமையை சமாளிக்க முடியாமல் மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்களும் அல்லாடிக்கொண்டிருந்தார்கள்.

‘அந்தப் பாடசாலையின் ஓர் அறையை சத்திரசிகிச்சை கூடமாக மாற்றி இருந்தோம். அந்தப் பாடசாலையில் வைத்தியசாலை இயங்கத் தொடங்கிய பின்னர் 13 ஆம் நாளாக இருக்க வேண்டும். வைத்தியசாலையைச் சுற்றிலும் எறிகணை தாக்குதல்கள். காயமடைந்தவர்களும் இறந்தவர்களும் வைத்தியசாலைக்கு வந்த வண்ணம் இருந்தார்கள். அப்போது எறிகணை ஒன்று சத்திரசிகிச்சை பிரிவில் நேரே வந்து வெடித்துச் சிதறியது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இறையொளி என்ற மருத்துவ போராளி அந்த இடத்திலேயே மரணமடைந்தார். அருகில் மற்றுமொரு நோயாளிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த மற்றுமொரு பெண் மருத்துவ போராளி ஓடிச் சென்று அவரைப் பார்த்து சிகிச்சை அளிக்க முற்பட்டார். ஆனால் அவருடைய உயிர் உடனடியாகவே பிரிந்திருந்தது. அந்த நிலையில் சக மருத்துவர் ஒருவர் உயிரிழந்துவிட்டாரே என்று அவர் மனம் கலங்கி தயங்கி நிற்கவில்லை. தான் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த வயோதிப நோயாளியைக் கவனிப்பதில் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டிருந்தார்’ என முள்ளிவாய்க்கால் பாடசாலையில் இயங்கிய வைத்தியசாலை மீதான தாக்குதல் குறித்தும் சக மருத்துவ போராளி ஒருவரின் இழப்பு பற்றியும் மற்றுமொருவரின் கடமை உணர்வு பற்றியும் கானவி கூறினார்.

மருத்துவ பணியில் ஈடுபட்டிருந்த போது பசி தாகம் என்ற உணர்வுகள் ஏற்பட்டிக்கவில்லை என கூறும் முன்னாள் மருத்துவ போராளியான கானவி, அதற்கு அங்கு படுகாயமடைந்து உயிர் துடி துடிக்க வந்து சேர்ந்த நோயாளிகளின் உயிர்களைக் காப்பதற்காகச் செயற்பட வேண்டும் என்று அரச மருத்துவர்களும் மருத்துவ போராளிகளும் தீவிரமாக ஈடுபட்டிருந்ததே காரணமாக இருக்க வேண்டும் என குறிப்பிடுகின்றார். இத்தகைய தீவிரமான நிலைமை ஒரு மாதத்திற்கும மேலாக நீடித்திருந்தது என்று அவர் நினைவுகூர்கின்றார்.

உணவுப் பற்றாக்குறை நிலவிய அந்த சூழலில் விடுதலைப்புலிகளின் நிர்வாக சேவை மற்றும் புனர்வாழ்வுக் கழகம் என்பன கஞ்சியும் வாய்ப்பண் எனப்படும் சிற்றுணவையும் தயாரித்து வழங்குவதில் முனைப்புடன் செயற்பட்டிருந்தன. இந்த உணவு வழங்கும் இடங்களில் பெண்களும் குழந்தைகளும் வரிசையில் நின்று அவற்றைப் பெற்றுச் சென்று குடும்பத்தினருடன் பசியாறினார்கள் என தெரிவித்த அவர் அத்தகைய உணவு விநியோக நிகழ்வொன்றில் உணவுக்காக வரிசையில் நின்றவர்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடுகின்றார்.

அந்த இடத்தில் கொத்துக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. கஞ்சியும் வாய்ப்பண்ணும் வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்தவர்களில் குறைந்தது 8 குழந்தைகளாவது அந்தச் சம்பவத்தில் உயிர் இழந்திருக்க வேண்டும். எனக்கு எண்ணிக்கை சரியாக நினைவில்லை. அந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒரு குழந்தை என்னிடம் சிகிச்சை பெறுவதற்காக அனுப்பப்பட்டிருந்தது. அந்த மூன்று வயதுக் குழந்தை தான் வாங்கிய வாய்ப்பண் ஒன்றை, ஒரு கடி கடித்துவிட்டு மிகுதியைத் தனது கையில் இறுக்கமாகப் பற்றிப் பிடித்திருந்தது. அதைக் கண்டதும் எனது கண்கள் குளமாகின. என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. அந்த நிலையிலேயே அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்தேன்’ என தனது மனக்கவலை மிக்க அனுபவத்தை அவர் விபரித்தார்.

பல்வேறு பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும் மருந்துப் பொருட்கள் இல்லாத நிலையிலும் முள்ளிவாய்க்காலில் இறுதியாக இயங்கிய வைத்தியசாலையை விட்டு வெளியேறுமாறு 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதுபற்றியும் கானவி குறிப்பிடுகின்றார்.

‘அன்று அதிகாலை நேரம். அந்த வைத்தியசாலையில் எங்களுக்குப் பொறுப்பாக இருந்தவர் ஒரு மூத்த மருத்துவர். நீண்ட காலமாக மருத்துவ துறையின் பல பிரிவுகளில் சேவையாற்றி தேர்ச்சி பெற்றிருந்த அனுபவம் மிக்க சத்திர சிகிச்சை நிபுணரான அவர், நெருக்கடியான நேரங்களில் உறுதியாகச் செயற்படுவதுடன் மற்றவர்களையும் வழி நடத்துகின்ற திறமை வாய்ந்தவர். அவரே அந்த உத்தரவைக்கேட்டதும் அதிர்ந்து போனார். வைத்தியசாலையில் இருந்து வெளியேற வேண்டும் என்ற தகவலை எங்களிடம் சொல்ல முடியாமல் தலையில் கையை வைத்து பெரிதாக அழத் தொடங்கிவிட்டார். அவரைச் சுற்றி நின்றிருந்த எங்கள் மனங்களும் கண்களும் கலங்கின. எப்படி அந்த வைத்தியசாலையையும் அங்கு எங்களை நம்பி வந்திருந்த காயமடைந்தவர்களையும் விட்டுச் செல்வது என்று தெரியாமல் தடுமாறி திகைத்து நின்றிருந்தோம் என்று குரல் கரகரக்க கூறினார் கானவி.

முள்ளிவாய்க்காலின் இறுதி வரையில் யுத்தத்தின் பிடியில் சிக்கித் தவித்திருந்தவர்களின் அனுபவங்கள் மனங்களை உலுக்கி தவிக்கச் செய்யத்தக்கவை. அந்த அளவுக்கு அங்கு மனிதாபிமானம் அற்று தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரம் பெற்றிருந்தன.

சொத்துக்களை இழந்த இழப்பிலும் பார்க்க சொந்தங்களை இழந்ததனால் ஏற்பட்ட இழப்பை பலர் இன்னும் தாங்கிக் கொள்ள முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள். முள்ளிவாய்க்காலிலும் அங்கு வருவதற்கு முன்னர் வேறு பல இடங்களிலும் எறிகணை தாக்குதல்களிலும், குண்டுத் தாக்குதல்களிலும் சிக்கி பாதிக்கப்பட்ட சம்பவங்களை பல வருடங்கள் கடந்த நிலையிலும் அவர்களால் மறக்க முடியவில்லை. அந்த சம்பவங்கள் அவர்களுடைய நெஞ்சங்களில் நெருப்புத் துண்டங்களாகக் கனன்று கொண்டிருக்கின்றன.

ஈழப்போரின் இறுதிக்கட்டமாகிய முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற உயிர்க்கொலைகள், திட்டமிட்ட வகையில் இனப்படுகொலையாகவே நோக்கப்படுகின்றது. வலுவான ஆயுதப்பலத்தைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளை இலங்கை அரசு சர்வதேச நாடுகளின் ஆதரவோடும் ஒத்துழைப்போடும் இராணுவ ரீதியாக அழித்து ஒழித்துவிட்டது. ஆயினும் இறுதிப்போரின்போது இடம்பெற்ற உரிமை மீறல்களுக்கும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கும் பொறுப்பு கூற வேண்டும் என்று ஐநா மனித உரிமைப் பேரவையும், சர்வதேசமும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

ஆனால் அந்த அழுத்தத்திற்;கு ஆதாரமாக உள்ள ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களுக்கு அரசு இணை அனுசரணை வழங்கியுள்ள போதிலும் பொறுப்பு கூறும் விடயத்தில் தன்னிச்சையாக, தாமதம் மிக்க செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றது.
மறுபுறத்தில் விடுதலைப்புலிகள் நடத்திய ஈழப் போர் மூள்வதற்கான காரணம் குறித்து அரசுகள் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. தீர்க்கப்படாத நிலையில் பல தசாப்தங்களாகத் தொடர்ந்த இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வின் மூலம் முடிவு காண வேண்டும் என்ற அரசியல் சூத்திரம் ஆட்சியாளர்களுக்கு உடன்பாடில்லாத ஒரு விடயமாகவே இருந்து வருகின்றது.

இந்த நிலையில் போர்ச்சூழலில் குறிப்பாக இறுதி யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்திற்கே உள்ளாகி இருக்கின்றது. அதேநேரம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கண்டு, எரியும் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கின்ற தங்களுக்கு இயல்பான ஒரு மறுவாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்கு அரசு முன்வரவில்லையே என்ற அரசியல் ரீதியான ஆதங்கத்திற்கும் அவர்கள் ஆளாகி இருக்கின்றார்கள்.

செல்வரட்னம் சிறிதரன்

Leave a comment