தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்?- இளைஞர் அணி நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த ஆலோசனை

314 0

நடிகர் ரஜினிகாந்த் இன்று இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பதால், தமிழகம் முழுவதும் ஆதரவு திரட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளைஞர் அணியினருடன் ஆலோசனை நடத்திய ரஜினி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நாம் தொடங்க இருக்கும் புதிய கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நிர்வாகிகள் சிறப்பாக பணி செய்வோம் என்று உறுதி அளித்தனர். பின்னர் இளைஞர் அணி நிர்வாகிகள் ரஜினியுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய பின்னர் ரஜினி தனது அர சியல் பயணத்தை வேகப்படுத்தியுள்ளார். இந்த மாதம் தொடர்ச்சியாக அவர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

கடந்த 9-ந்தேதி காலா பட இசை வெளியீட்டு விழாவை ரஜினி மக்கள் மன்றத்தினர் 10 ஆயிரம் பேருடன் கொண்டாடிய ரஜினி, புதிய கட்சியை தொடங்குவதற்கான காலம் விரைவில் வரும் என்று அறிவித்தார். யார் என்ன சொன்னாலும் எனது வழியில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று கூறினார். மறுநாள் 10-ந்தேதி தனது வீட்டில் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினி இன்று இளைஞர் அணியினரை சந்தித்துள்ளார். இதன் மூலம் புதிய கட்சியை தொடங்குவதற்கான அடித் தளத்தை ரஜினி ஆழமாக போட்டு வருவது உறுதியாகி உள்ளது.

இதற்கிடையே ரஜினி, மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் ஈடுபட்டுள்ள மக்கள் மன்றத்தினரை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த சுற்றுப்பயணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது பொதுமக்களிடம் அவர் ஆதரவு திரட்டவும் திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் ரஜினி நேரடியாக சென்று மக்களை சந்திக்கவில்லை என்கிற குறையும் நீங்கும் என்று நம்புவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நிர்வாகிகள் சந்திப்பு, பரபரப்பு பேச்சு என அரசியல் களத்தில் அதிரடியை காட்டிவரும் ரஜினி புதிய கட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் அரசியல் பணிகளை மேலும் தீவிரப்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

Leave a comment