குட்கா ஊழல் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து அரசு அப்பீல் செய்யவில்லை- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

1080 0

குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்த குட்கா ஊழலில் தமிழக அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது புகார் கூறப்பட்டது.

இதுபற்றி மாநில அரசின் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். குட்கா ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது.

இதை ஏற்று குட்கா ஊழலை சி.பி.ஐ. விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரி இ.சிவக்குமார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. விரைவில் விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே சி.பி.ஐ. விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் அமைச்சர் தனது பினாமி மூலம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளதாக பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

குட்கா விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதை நான் வரவேற்கிறேன். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் மீது குற்றம் சாட்டப்படுவதால் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படுவதாக கோர்ட்டு கூறியிருக்கிறது. இதில் லஞ்ச ஒழிப்பு துறை மீது எந்த குற்றச்சாட்டும் கூறப்படவில்லை.

மேலும் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை. மேல் முறையீடு செய்யும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை. தனிப்பட்ட முறையில் தான் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரித்து குட்கா ஊழலில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்கட்டும். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

அதே சமயம் அன்புமணி ராமதாஸ் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதும் அதற்கான காரணம் என்ன என்பதும் எங்களுக்கு தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment